தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நமக்கு நாமே சூனிய திட்டம்!

 நமக்கு நாமே சூனிய திட்டம்!

 நமக்கு நாமே சூனிய திட்டம்!


UPDATED : மார் 31, 2026 02:24 AM

ADDED : மார் 31, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2026 02:24 AM ADDED : மார் 31, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அறிவித்துள்ள இலவசங்களும் மானியங்களும், பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், விபரம் தெரிந்த பொருளாதார அறிஞர்களோ பதறுகின்றனர். நாம் எத்தகைய பாதையில் பயணிக்கிறோம்? இது, தமிழகத்தை எங்கே கொண்டு போய் விடப்போகிறதோ என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரூ. 60,000 கோடி



ஆந்திராவின் முன்னேற்றத்திற்காக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, 15 ஆண்டுகால திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதன் சிறப்பு ஆலோசகரான பொருளாதார அறிஞர் வி.குமாரசாமி, தி.மு.க.,- மற்றும் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்தபின் கூறியதாவது:

இரண்டு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் எது நிறைவேற்றப்பட்டாலும், தமிழகத்தின் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்தது போல் ஆகிவிடும். தி.மு.க.,வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு ஆண்டும் 61,316 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். அ.தி.மு.க.,வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு ஆண்டும் 64,796 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். அதாவது, தற்போது, கொடுக்கப்படும் மாதம் 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவுக்கு மேலதிகமானது இது.

இது, தி.மு.க.,வின் 8,000 ரூபாய் கூப்பனும், அ.தி.மு.க.,வின் 10,000 ரூபாய் நிதி உதவி தொகை மற்றும் கடன் தள்ளுபடி இல்லாத கணக்கு. கூப்பன் கொடுக்க, 18,000 கோடி ரூபாய் செலவாகும். நிதி உதவி மற்றும் கடன் தள்ளுபடிக்கு 28,700 கோடி ரூபாய் செலவாகும். இதையெல்லாம் நிறைவேற்ற தமிழகத்திடம் நிதி ஆதாரம் கிடையாது. கடன் வாங்க வேண்டும். கடன் வாங்கினால் 'நிதி பற்றாக்குறை' ஏற்படும்.

மாநிலங்கள் தங்கள் மொத்த வருவாயில், எவ்வளவு துாரம் நிதி பற்றாக்குறை வைத்திருக்கலாம் என்று, 16வது நிதி ஆணையம் வரையறை செய்துள்ளது. அதன்படி, மொத்த வருவாயில், 3 சதவீதம் நிதி பற்றாக்குறை இருக்கலாம். இப்போதே, அது 3.50 சதவீதம் அளவுக்கு அதிகமாகிவிட்டது.

வாக்குறுதிகள்படி, கூடுதல் இலவசங்களும் மானியங்களும் நிறைவேற்றப்படுமானால், தமிழகத்தின் கடன் அளவு பன்மடங்கு ஆகிவிடும். நிதி பற்றாக்குறை 4.50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிடும். டோக்கன் அல்லது 10,000 ரூபாய் நிதி உதவி கொடுக்கும் ஆண்டில், 5.80 சதவீதம் அளவுக்கு கூட எகிறலாம்.

இப்படி அதிகரித்தால், மத்திய நிதி ஆணையம், இந்த அளவுக்கு நிதி பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும். அதனால் என்னாகும்? தமிழகத்தால் கூடுதலாக கடன் வாங்க முடியாது. அப்போது, நிதி பற்றாக்குறை அளவை உயர்த்திக்கொள்ள இங்கிருந்து கொடி பிடிப்பர் அல்லது மத்திய அரசு அனுமதிக்கவில்லை, அதனால் எங்களால் உரிய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று டில்லியை கைகாட்டி, தப்பித்துக் கொள்வர்.

இலவசங்களின் சுமை தவிர, சம்பள சுமையும் அதிகரிக்கப்போகிறது. எட்டாவது ஊதிய குழு, தனது பரிந்துரைகளை விரைவில் அறிவிக்கும். மத்திய அரசு அதை அமல்படுத்தியவுடன் மாநிலங்களும் நடைமுறைக்கு கொண்டுவரும். அந்த செலவைப் பற்றி இவர்கள் நினைத்துப் பார்த்தனரா என்றே தெரியவில்லை.

தரமான சாலைகள், பள்ளிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய முதலீட்டை, இவர்கள், இலவசங்களாக கொடுத்து, தமிழகத்தை தத்தளிக்க வைக்கப் போகின்றனர். நம்மிடம் இருந்த குறைந்தபட்ச நிதி ஒழுங்கு கூட இனி காணாமல் போய்விடும். இவ்வாறு வி.குமாரசாமி கூறினார்.

வருமானம் எங்கே?



தமிழக பட்ஜெட்டின் அளவு, கிட்டத்தட்ட 4.40 லட்சம் கோடி ரூபாய். அதாவது, ஓராண்டில் தமிழக அரசு செலவிட திட்டமிட்டுள்ள தொகை 4.40 லட்சம் கோடி ரூபாய். அதற்கான வருவாய் 3.30 லட்சம் கோடி ரூபாய்தான். இதில், அரசு ஊழியர் சம்பளம், பென்ஷன், வட்டி, மானியம் என, தவிர்க்க முடியாத செலவுகளே, 3.70 லட்சம் கோ டி ரூபாய். ஆக, அன்றாட செலவுக்கு தேவையான வருவாயையே தமிழக அரசால் ஈட்ட முடியவில்லை.

இது போகத்தான், சாலை அமைப்பது, பள்ளி கட்டடங்களை உருவாக்குவது உள்ளிட்ட செலவுகளை செய்ய வேண்டும். இதற்கு மேல், ஆடம்பர செலவாக தற்போது, இலவசங்களும் வருகின்றன. இந்த வருவாய் பற்றாக்குறை நிலை பற்றி, பா.ஜ., தொழில் வல்லுனர் அணியின் மாநில பொதுச்செயலர் பட்டய கணக்காளர் சுந்தரராமன் கூறியதாவது:

தமிழக அரசின் சொந்த வரி வருவாயை பெருக்குவதற்கான எந்தவித திட்டமும் இல்லாமல், தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. இவர்களுடைய எதிர்பார்ப்பு, மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஆதாரங்கள் உயரும் என்பது தான். ஆனால், அது எவ்வளவு துாரம் அதிகமாக முடியும்?

தி.மு.க., தரப்பில் தமிழகத்திலேயே இருக்கும் மணல், கிரானைட் உள்ளிட்ட வளங்களை முறையாக பயன்படுத்தி, வருவாயை பெருக்குவோம் என்று கூறுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்ற கருத்துகள் தான் சொல்லப்பட்டன. ஆனால், எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவை நடைமுறைக்கு வரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஒரு பக்கம் கடன் சுமை அதிகமாகும் போது, செலவுகளை கட்டுப்படுத்த துவங்குவர். ஏற்கனவே மாநகராட்சியின் துாய்மை பணிகளை தனியாருக்கு கொடுத்தது போல, பல்வேறு அரசு பணிகள் தனியார்மயமாக்கப்படும். புதிய அரசு பணியிடங்கள் உருவாக்கப்படாது. காலியாக இருப்பவையும் நிரப்பப்படாது. அங்கும் கான்ட்ராக்ட் பணிகளே அதிகமாகும்.

படிப்படியாக அரசு ஊழியர்களுக்கான பி.எப்., செலுத்துவதில் சுணக்கம் காட்ட ஆரம்பிப்பர். புரொபஷனல் வரி அதிகமாகும். மாநில அரசுக்கு வரி வருவாய் தரும் டாஸ்மாக், பத்திரப்பதிவு உள்ளிட்ட இடங்களில் விலையும் கட்டணங்களும் உயரும். இவை இல்லாமல், தமது சொந்த செலவுகளை ஈடுகட்டுவதற்கு ஏற்ப, ஆவின், மின் துறை, பஸ் போக்குவரத்து ஆகியவற்றிலும், கட்டணங்கள் 'கிர்'ரென உயரும்.

ஐந்து ஆண்டுகளின் முடிவில், இப்போது இருப்பதுடன் சேர்த்து, மேலும், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை அதிகரிக்கும். நாம் மட்டுமல்ல, நம் பேரன்களும் கூட தலைநிமிர முடியாத அளவுக்கு கடன் சுமையை இந்த அரசுகள் வைத்துவிட்டுப் போகப் போகின்றன. இவ்வாறு சுந்தரராமன் கூறினார்.

பழக்கமாகி விடும்



இலவசங்கள் இவ்வளவு உயரும்போது, அவற்றை குறைக்க முடியாத சூழல் சமூகத்தில் உருவாகிவிடும் என்பதும் வல்லுனர்களுக்கு கவலை அளிக்கிறது.

பொருளாதார அறிஞர் வி.குமாரசாமி கூறியதாவது: எல்லாவற்றையும் விட எனக்குக் கவலை தரும் ஒரு அம்சம் இருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் 'சக்மா பபூன்' என்ற பெரிய வகை குரங்கு இனம் இருக்கிறது. சில பகுதிகளில், அந்த இன குரங்குகளுக்கு, மனிதர்கள் நெடுங்காலமாக எல்லா உணவுப் பொருட்களையும் கொடுத்து வந்தனர். அதனால், தானாக இரை தேடாமல் இருப்பதற்கு பழக்கமாகிவிட்டது. இப்போது, அவை யாரை பார்த்தாலும் அவர்கள் கையில் இருப்பதை பறித்துக்கொள்கினறன. மீறி எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த குரங்குகள் காயப்படுத்திவிடும்.

அதாவது தனக்கு எல்லாமே இயற்கையாகவே கொடுக்கப்பட்டது, எதையும் தான் உழைத்து தேட வேண்டும் என்ற எண்ணமே அந்த குரங்குகளுக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. இலவசங்களை கொடுத்து பழக்கப்படுத்தும் போது, மக்களுடைய உழைப்பு ஆர்வம் மட்டுப்பட்டு, உற்பத்தியும் முற்றிலும் சரிந்துவிடும். மேன்மேலும் இலவசங்களையே எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us