நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரசாரம்; மின் கம்பங்களில் ஏறத் தடை
நாகை, திருவாரூரில் விஜய் இன்று பிரசாரம்; மின் கம்பங்களில் ஏறத் தடை
ADDED : செப் 20, 2025 06:51 AM

சென்னை; நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவுள்ள நிலையில், மின் கம்பங்களில் ஏற, அக்கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்யும் வகையில், த.வெ.க., தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது.
செப்., 13ம் தேதி திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தார். இதைதொடர்ந்து இன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். நாகப்பட்டினம், புத்துார் அண்ணாதுரை சிலை சந்திப்பு, திருவாரூர் நகராட்சி அலுவலகம் தெற்கு வீதி ஆகிய இரண்டு இடங்களில், அவர் பேசவுள்ளார்.
விஜய் பேசவுள்ள இடங்களில் மின் கம்பங்கள் உள்ளதால், மின் இணைப்பை துண்டிக்குமாறு, த.வெ.க., தரப்பில், மின் வாரிய அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல, மின்சாரம் வழங்கப்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, த.வெ.க., தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
விஜய் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் உள்ள கட்டடங்கள், மதில் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், கொடி கம்பங்கள், சிலைகள், கிரில் கம்பிகள், தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறுவதையும், அருகில் செல்வதையும் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.
கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதி பெறாமல் வைக்கக்கூடாது. பட்டாசு வெடித்து வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.