ADDED : செப் 20, 2025 02:52 AM

சென்னை : சென்னையில், சுதந்திர போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உருவ சிலையை திறந்து வைத்த முதல்வர், 'வேலுார் காவலர் பயிற்சி பள்ளிக்கு, அவர் பெயர் சூட்டப்படும்' என அறிவித்தார்.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில், சென்னை, காந்தி மண்டபம் வளாகத்தில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சிலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின், அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'வேலுார் காவலர் பயிற்சி பள்ளிக்கு, வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படும்' என, அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சார்பில், சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 29 கோடி ரூபாயில், அலுவலக கட்டடம் கட்டப்பட்டுஉள்ளது.
இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அத்துடன், தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையத்தை துவக்கி வைத்து, அதற்கான லோகோவை வெளியிட்டார். புதிய கட்டடத்தில் ஆணையம் செயல்படும்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.