UPDATED : ஜூன் 14, 2026 04:31 PM
ADDED : ஜூன் 14, 2026 03:41 PM

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தனித்தன்மையோடு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்தப்போவதாக வாசன் கூறியுள்ளார்.
ராஜ்யசபா எம்பி
ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா கட்சி, கடந்த 2019 ம் ஆண்டு முதல் தேஜ கூட்டணியில் நீடித்து வருகிறது. அதிமுக ஆதரவுடன் வாசன் ராஜ்யசபா எம்பி ஆனார். 2024 லோக்சபா தேர்தலில் இக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதும் தமாகா தேஜ கூட்டணியிலேயே நீடித்தது.
தோல்வி
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமாகா 5 தொகுதிகளில் போட்டியிட்டது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. அப்போ அக்கட்சி நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
செயற்குழுகூட்டம்
இந்நிலையில் சென்னையில் இன்று, தமாகா செயற்குழு கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமாகா அறிவித்துள்ளது.
நட்புக்கட்சி
பல்வேறு தொண்டர்கள், பொறுப்பாளர்களை தாண்டி, பல்வேறு சவால்களை தாண்டி கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தமாகா பணியாற்றியது.தற்போது பாஜ, அதிமுக அதனைசார்ந்த கூட்டணி கட்சிகளோடு எந்த சண்டையும் கிடையாது. தோற்றுவிட்டோம் என சண்டைக் கட்சியாக மாறவில்லை. நட்புக் கட்சியாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
தனித்தன்மை
இந்த தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் கருத்துகள் கூறப்பட்டன. 600 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரின் எண்ணமும், உள்ளாட்சி தேர்தல் வரும் வரை தமாகா தமிழகத்தில் தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பது தான்.தனித்தன்மையோடு தமாகா செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.கூட்டணியில் பொறுப்புகள், குறைவதாக பொறுப்பாளர்கள் கருதுகின்றனர். கூட்டணி அரசியலில் கட்சி வளர்ச்சி குறைவதாக கருதுகின்றனர்.
வலுப்படுத்துவோம்
வருங்காலத்தில் தமாகா தன்னை பலப்படுத்தவும், வலுப்படுத்தவும், நகரம் முதல் கிராமம் வரை மீண்டும் எங்கள் பணியை துவக்குவோம். 12 ஆண்டுகள் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் எங்களின் வலு குறைந்ததாக கருதுகிறோம். காரணம், கூட்டணி கட்சிகள், அதன் சார்ந்த பணிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தனித்தன்மையை இழக்க நாங்கள் விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி. அதுவரை கட்சியை பலப்படுத்துவதுஎன செயற்குழு எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நேரலை
தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் அளித்த பேட்டி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனை பார்க்க கிளிக் செய்யவும்:https://www.youtube.com/watch?v=VXAbSpXHvpg
