ADDED : மே 22, 2026 06:36 AM

மதுரை: த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகளில் மருத்துவ மனையில் ஆய்வுசெய்வது மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.எல்.ஏ., கருப்பையாவும் சேர்ந்துள்ளார்.
சோழவந்தான் தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., கருப்பையா நேற்று பாலமேடு பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். செயல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் மாவட்ட பயிற்சி கூட்டத்திற்கு சென்றிருந்தனர்.
இதனால் பேரூராட்சி தலைவி சுமதியின் கணவர் தி.மு.க., நிர்வாகி பாண்டியராஜனிடம் பேரூராட்சியில் கிடப்பில் உள்ள சாலை பணிகள் உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார்.
தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும், அடுத்து வரும்போது குப்பை கிடந்தால் நானே அள்ளுவேன் என்றார். வார சந்தை கட்டடம் மற்றும் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் என கட்சி நிர்வாகிகள் புடைசூழ 'விசிட்' அடித்து சென்றார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி தலைவி சுமதிக்கு பதில் அவரது கணவரிடம் திட்ட பணிகள் குறித்து எம்.எல்.ஏ., பேசி சென்றது சர்ச்சையாகி உள்ளது.
