ADDED : மே 14, 2026 06:44 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி: சட்டசபையில் த.வெ.க., பலம் 107 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே. தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், விஜய் ஆட்சி அமைத்துள்ளார்.
தேர்தலில், 66 சதவீதம் பேர், த.வெ.க.,வுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு, 1.34 கோடி ஓட்டுகள் கிடைத்து உள்ளன. அ.தி.மு.க., வலிமையான இயக்கம்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்களின் விருப்பப்படியே, வேட்பாளர்களை தேர்வு செய்தோம். தனிப்பட்ட முறையில் நான் தேர்வு செய்யவில்லை.
ஐந்து சதவீத வேட்பாளர்கள் தான், மாவட்ட செயலர்களின் விருப்பத்திற்கு மாறாக தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சரவையில் இடம் பெறும்பதவி ஆசையில், த.வெ.க.,வுக்கு வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
அவர்களை கட்சி தொண்டர்களும், தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
கூட்டணி கட்சிகள் தவிர, வேறு எந்தக் கட்சியுடனும் அ.தி.மு.க., பேச்சு நடத்தவில்லை. ஆட்சி அமைப்பது தொடர்பாக, நுாற்றுக்கு நுாறு சதவீதம் தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தவில்லை.
அ.தி.மு.க.,வின், 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவளித்தாலும், கட்சியில் அனைத்து அதிகாரமும் பொதுச்செயலரான எனக்கு தான் உள்ளது.
கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலருக்கு தான் உண்டு. இதை, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது.
த.வெ.க.,வுக்கு ஆதரவளித்துள்ள கம்யூனிஸ்ட், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளன.
இதனால் தான், அ.தி.மு.க.,வில் ஒரு பிரிவினரை, முதல்வர் விஜய் சந்தித்து ஆதரவை பெற்றுள்ளார். இதனால், சட்டசபை விதிகளையும், மரபுகளையும் மீறியுள்ளார். இப்படி தவறான பாதையில் செல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
