தேர்தல் பணியில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தேர்தல் பணியில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 18, 2025 04:40 AM

மதுரை : 'தேர்தல் கமிஷன் உத்தரவையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களை ஓட்டுச் சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) பணியில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும்' என சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தேர்தலையொட்டி பி.எல்.ஓ.,க்களுக்கு, தகுதியான வாக்காளர்களை பதிவு செய்தல், பெயர் சேர்த்தல், நீக்கு தல், திருத்தம் செய்ய படிவம் வழங்குதல், கள ஆய்வு செய்தல், உள்ளூர் மக்கள், அரசியல் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து இறந்த வாக்காளர்களை அடையாளம் காண்பது, ஓட்டு சிலிப்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படும். இதற்காக சில ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி சவாலாக இருக்கும் நிலையில், 'எமிஸ்' உள்ளிட்ட ஆன்லைன் பதிவேற்றப் பணிகள், திட்டப் பணிகளை கண்காணிப்பு, தொழில்நுட்பத்துடனான கற்பித்தல் பணி, நலத்திட்டங்களை பெற்று வழங்குதல் என மூச்சு முட்டும் அளவில் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. இதனால் பி.எல்.ஓ., பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என சங்கங்கள் தொடர்ந்து வலி யுறுத்தின.
இதுகுறித்து தமிழக அரசு, தேர்தல் கமிஷன் கவனத்திற்கு கொண்டுசென்றது. இதன் எதிரொலியாக ஆசிரியர்களை விடுவித்து, பி.எல்.ஓ., பணியில் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள், தேசிய வாழ்வாதார திட்ட ஊழியர்களை ஈடுபடுத்த அனுமதி உத்தர விட்டுள்ளது.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பி.எல்.ஓ., பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இனிமேல் கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபடலாம்.
இந்த உத்தரவு வெளியாகியும் சில பெரிய மாநகராட்சி பகுதிகளில், 'எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை' எனக் கூறி பி.எல்.ஓ., பணிகளுக்கு ஆசிரியர்கள் விபரத்தை கல்வி அதிகாரிகள் கேட்டு பெற்று வருகின்றனர். ஆசிரியர்களை முழுமையாக இப்பணியில் இருந்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.