மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ADDED : செப் 14, 2025 01:27 PM

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய போது, தமிழகத்தில் விளக்கமாக சொல்ல எனக்கு பிரதமர் மோடி பணி கொடுத்து இருந்தார். 5,18 சதவீதமாக இரண்டே கேட்டகிரியில் ஜிஎஸ்டி வந்துவிட்டது. 140 கோடி பேர் மீதும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் தாக்கம் இருக்கும். மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. ஜிஎஸ்டி மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்து உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பில் மாநிலங்களுக்கு அதிக பங்கு உண்டு. ஆனால் பிரதமரை பாராட்ட சிலருக்கு மனம் வருவதில்லை.
ஜிஎஸ்டி அமலான போது வரி செலுத்துவோர் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாள் பிரதமர் அழைத்து, ஜிஎஸ்டி குறித்து பல விமர்சனங்கள் வருகிறது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறினார்.
8 மாதங்களாக எல்லா பொருட்களையும் ஆய்வு செய்து வரியை மாற்றி அமைத்தோம். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக இருக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால் செலவு குறைந்து சேமிப்பு அதிகமாகும். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று வரி குறைக்கப்பட்டது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.