இது போன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம்; ஆபாச பேச்சு குறித்து பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் குட்டு
இது போன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம்; ஆபாச பேச்சு குறித்து பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் குட்டு
ADDED : செப் 16, 2025 07:01 PM

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது. பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இது போன்ற பேச்சுகளை தவிர்த்திருக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கட்சி பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இருப்பினும், இது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. கடந்த முறை, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.அப்போது சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்தது.
பின், இந்த வீடியோ மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதாக தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்., 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது. அவருக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்து கொள்ளலாம். புகார்களை போலீசார் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.
பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். போலீசார் குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் முறையான விசாரணை நடத்தி இருக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.