அனுமதியின்றி கோ.சி.மணிக்கு சிலை அமைப்பு: அதிகாரி எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றம்
அனுமதியின்றி கோ.சி.மணிக்கு சிலை அமைப்பு: அதிகாரி எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றம்
ADDED : செப் 13, 2025 08:14 AM

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலையை வைக்க தி.மு.க.,வினர் முயன்றனர். அனுமதி இல்லை என அதிகாரி கூறியதால், இரவோடு இரவாக தி.மு.க.,வினர் சிலையை அகற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த அண்ணாதுரை சிலையை, புதிய பஸ் ஸ்டாண்டில் சாலையை நோக்கி இருக்கும் வகையில், அமைத்துக்கொள்ள தி.மு.க., சார்பில், பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், பேரூராட்சி சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று (12ம் தேதி) இரவு 10:00 மணிக்கு தி.மு.க.,வினர் புதிய பஸ் ஸ்டாண்டில், அண்ணாதுரை சிலையை அமைத்தனர். அதே சமயம் எந்த முன்னறிவிப்பும், அனுமதியும் இன்றி முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலையை அமைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், 'அண்ணாதுரை சிலை வைக்க மட்டும் தான் பேரூராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி சிலை அமைக்க, எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. சிலையை அகற்றுங்கள்' என கூறினார்.திமுகவினர் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திருவிடைமருதுார் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
இரவு 11:30 மணிக்கு அங்கு வந்த போலீசார், முறைப்படி அனுமதி பெற்று சிலை வைத்துக்கொள்ளுங்கள் என, அங்கிருந்த முன்னாள் எம்பி ராமலிங்கத்திடம் தெரிவித்தனர். அனுமதி இல்லாத நிலையில், உடனடியாக சிலையை அகற்ற கூறினர். இதையடுத்து இரவோடு இரவாக கோ.சி.மணி சிலையை தி.மு.க.,வினர் மீண்டும் எடுத்து சென்றனர்.
முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.