ADDED : நவ 03, 2025 12:59 AM

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் பா.ம.க., சார்பில், 'உரிமை மீட்க தலைமுறை காக்க' பிரசாரம் நடைபெற்றது.
அதில், அன்புமணி பங்கேற்று பேசியதாவது:
நான் ஏதாவது பேசினால், தி.மு.க., அரசு நேரடியாக எனக்கு பதில் அளிக்காமல், வன்னிய சமுதாயத்தை சார்ந்த அமைச்சர்களை விட்டு அறிக்கை விட செய்கிறது.
உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என அறிவுறுத்தியும் இதுவரை திமுக., அரசு வழங்கவில்லை.
வரும் டிச.,7ல், 15 சதவீத உள் ஒதுக்கீடு கோரி, சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறேன்; சிறை செல்ல தயாராக இருக்கிறேன். கடந்த மூன்று தலைமுறைகளாக கருணாநிதி, ஸ்டாலின் குடும்பத்தினர் மதுக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நிர்வாக திறமையற்றவர்.
நாமக்கல், திருச்செங்கோடு பகுதி ஏழை நெசவாளர்களின் கஷ்டத்தை சாதகமாக பயன்படுத்தி, பெரம்பலுாரில் தி.மு.க., - எம்.எல்.ஏ., சிறுநீரக திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
நெசவாளர்களுக்கு ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 40 லட்சம் 50 லட்சத்திற்கு வெளிநாட்டில், இந்த சிறுநீரகங்கள் விற்கப்பட்டிருக்கின்றன.
இந்த சிறுநீரக திருட்டு குறித்து, உரிய விசாரணை நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

