'வேண்டுமென்றே சிலர் மின் தடையை ஏற்படுத்துகின்றனர்'
'வேண்டுமென்றே சிலர் மின் தடையை ஏற்படுத்துகின்றனர்'
ADDED : ஜூன் 09, 2026 05:56 AM
சென்னை: தமிழக மின் வாரியத்தில் வெளிப்படைத் தன்மையுடன், 300 உதவி செயற்பொறியாளருக்கு, செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கியதற்காக, மின் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு, பொறியாளர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், ''மின் வாரியத்தில், 15,000 பேரை புதிதாக நியமிக்க, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் மொத்த காலி பணியிடங்களும் நிரப்பப்படும்,'' என்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மின் சாதன பழுதால் ஏற்படும் மின் தடையை, விரைவாக சரி செய்ய, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரைக்கு அடியில் செல்லும் மின் கேபிள்களை, சாலை பணிகளை மேற்கொள்ளும், தனியார் நிறுவனங்கள் சேதமாக்கி விடுகின்றன. அந்நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும்.
ஆவடி போன்ற இடங்களில், சில நபர்கள் வேண்டுமென்றே, 'பியூசை' பிடுங்கி 'ஆப்' செய்வது, அதை திருடி எடுத்து செல்வது, போன்ற வீடியோக்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக, உடனே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த பின், 'வீடியோ' வெளியிடப்படும். பல இடங்களில் திட்டமிட்டு, மின் தடை செய்யப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
