'திறன்' திட்டம் மாணவர்களுக்கு தனி வினாத்தாள்; தலைமையாசிரியர் 'தலை'யில் செலவு
'திறன்' திட்டம் மாணவர்களுக்கு தனி வினாத்தாள்; தலைமையாசிரியர் 'தலை'யில் செலவு
ADDED : செப் 15, 2025 03:49 AM

மதுரை : அரசு பள்ளிகளில் இன்று (செப்.15) துவங்கும் காலாண்டு தேர்வில் 6 முதல் 9 ம் வகுப்புகளில் உள்ள 'திறன்' திட்ட மாணவர்களுக்கு தனி வினாத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான செலவை தலைமையாசிரியர்களே ஏற்க வேண்டும் என கல்வி அதிகாரிகள் நிர்பந்திப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கல்வித்துறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மொழிப்பாடம், கணித திறனை மேம்படுத்தும் வகையில் இக்கல்வியாண்டில் 'திறன்' திட்டம் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 10 முதல் 30 சதவீதம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இன்று துவங்கும் காலாண்டு தேர்வில் இந்த மாணவர்களுக்கு திறன் பாடப்புத்தகம் சார்ந்து தனி வினாத்தாள் வழங்கப்படுகிறது. இந்த வினாத்தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டு தேர்வு வினாத்தாள்களின் மதிப்பெண்களுக்கு சமமாக இருக்கும். ஏற்கனவே மாணவர்களிடம் வழக்கமான காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த மாணவர்களுக்கு தனி வினாத்தாள் வழங்கி, அதை 'பிரின்ட் அவுட்' எடுத்து தேர்வின் போது வழங்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான செலவு குறித்து எதுவும் தெரிவிக்காததால் தலைமையாசிரியர்களே அவற்றை ஏற்க அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: வினாத்தாள் கட்டணமாக 6 - 8 ம் வகுப்பு மாணவர்களிடம் தலா ரூ.50 முதல் 80, ஒன்பது முதல் பத்தாம் வகுப்புக்கு ரூ. 80 முதல் 100, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவரிடம் ரூ.100 முதல் 120 என ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது திறன் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தது 30 சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய ஒரு வினாத்தாள் 3 பக்கங்களை கொண்டுள்ளது.தமிழ், ஆங்கிலம் உட்பட 5 தேர்வுகளுக்கு இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளியும் ஒரு வினாத்தாள் பதிவிறக்கம் செய்து அதை பிரின்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு வழங்க ரூ. ஆயிரக்கணக்கில் செலவாகும். இதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய வினாத்தாள் கட்டணத்தில் இருந்து வழங்கலாம்.
அதிகாரிகள் அதை செய்யாமல், தலைமையாசிரியர்களை செலவு செய்ய நிர்பந்திக்கின்றனர். தேர்வு முடிந்த பின்பாவது, திறன் திட்ட மாணவர்களிடம் வசூலித்த வினாத்தாள் கட்டணத்தை தலைமையாசிரியர்களுக்கு திரும்ப வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.