ADDED : நவ 04, 2025 07:22 AM

தஞ்சாவூரில் மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேட்டி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்காக, தேர்தல் ஆணையம் அளித்த காலக்கெடு குறைவு. தேர்தல் ஆணையம் 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை, அளவுகோலாக கொண்டுள்ளது.
தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரே மாதத்தில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது. இதனால், 20 லிருந்து 30 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.
இதனால், குடியுரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக, மா.கம்யூ., சார்பாக தமிழகம் முழுதும் கண்டன இயக்கம் நடத்தப்படும்.
தமிழகத்தில் கனிமவள கொள்ளையை எதிர்த்து யார் பேசினாலும், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கனிமவள கொள்ளை, பெரிய அரசியல் செல்வாக்குடன் தமிழகத்தில் நடக்கிறது. அறப்போர் இயக்கம் கருத்துகேட்பு கூட்டத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு உண்மையிலேயே ஊழல் செய்திருந்தால் விசாரிக்கலாம். தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறையை வைத்து வழக்குப்பதிவு, கைது என பா.ஜ., முயற்சிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, மக்களிடம் தங்களுக்கு ஆதரவை தேடும் தகிடுதத்தம் வேலை இது.
இவ்வாறு அவர் கூறினார்.

