அர்ச்சகர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்: பா.ஜ.,
அர்ச்சகர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்: பா.ஜ.,
ADDED : மே 31, 2026 01:15 AM
சென்னை: 'தேவையற்ற விவாதங்களும், எதிர்மறை சித்தரிப்புகளும் நிறுத்தப்பட்டு, நேர்மறையான சேவை செய்து வரும் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்களின் மரியாதையும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் அணி தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராமன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்செந்துார் கோவிலில் பொதுமக்கள் போல சென்று திடீர் ஆய்வு நடத்தி, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
தவறு நடந்திருந்தால், அது திருத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், ஒரு தனிப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, முழு அர்ச்சகர்கள் சமூகத்தின் மீதும் சந்தேக நிழல் ஏற்படுத்தும் விதமாக, சிலர் தொடர்ந்து இந்த விவகாரத்தை பெரிதாக்க முயல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் மிக எளிய வாழ்க்கை நடத்தி, குறைந்த வருமானத்திலும் பக்தியுடனும், ஒழுக்கத்துடனும் தினமும் பூஜை செய்து வருகின்றனர். அவர்களின் ஆன்மிக சேவையும், அர்ப்பணிப்பும், ஒரே சம்பவத்தின் வாயிலாக அளவிட முடியாது.
ஒருவரின் தவறை காரணமாக கொண்டு, முழு அர்ச்சகர் சமூகத்தையும், கோவில் மரபுகளையும் குறிவைத்து பேசுவது நியாயமில்லை. தவறை திருத்துவது அவசியம்.
ஆனால், அதை காரணமாக வைத்து பல நுாற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஆன்மிக மரபுகளையும், பண்பாட்டு அடையாளங்களையும் இழிவுபடுத்தும் அணுகுமுறை ஏற்க முடியாது.
தேவையற்ற விவாதங்களும், எதிர்மறை சித்தரிப்புகளும் நிறுத்தப்பட்டு, நேர்மறையான சேவை செய்து வரும் ஆயிரக்கணக்கான அர்ச்சர்களின் மரியாதையும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
