UPDATED : செப் 18, 2025 12:32 PM
ADDED : செப் 18, 2025 12:26 PM

சேலம்: ''டில்லியில் அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்த போது முகத்தை தான் துடைத்தேன். அதை திரித்து தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கின்றனர்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சேலத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: 153 தொகுதிகள் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். மக்களின் எழுச்சியின் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி என்பதை தெரிந்து கொண்டேன். மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதை எழுச்சி பயணம் மூலம் உணர்ந்து கொண்டேன். இரண்டு நாட்களாக நான் டில்லி சென்று திரும்பி வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இரட்டை நிலைப்பாடு
முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி என்னை பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார். இரட்டை நிலைப்பாடு உடன் திமுக அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி. இப்போது வெள்ளைக்கொடி. நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன். அதையும் ஊடகத்தினர் வெளிப்படுத்தி விட்டனர். 16ம் தேதி இரவு அமித்ஷாவை சந்திக்க, டில்லிக்கு நான் சென்றேன்.
என் முகத்தை...!
என்னுடன் கட்சி மூத்த தலைவர்கள், எங்களது மாநில உறுப்பினர்கள் உடன் அமித்ஷாவை சந்தித்தேன். நான் காலையில் துணை ஜனாதிபதியை இல்லத்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இரவு உள்துறை அமைச்சரை சந்திக்க அரசுக்கு சொந்தமான காரில் தான் சென்றேன். அமித்ஷாவின் வீட்டில் இருந்து வெளியே வரும் போது என் முகத்தை துடைத்தேன். அதை அரசியல் செய்கிறார்கள். இது வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திட்டமிட்டு அவதூறு
இந்திய நாட்டிற்கு முன் மாதிரியாக விளங்க கூடிய பத்திரிகைகள் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம். இதனை சிந்தித்து பாருங்கள். பரபரப்பான செய்தி கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் இதனை செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம். முகத்தை துடைக்கும் போது வீடியோ எடுத்து முகத்தை மூடி கொண்டு வந்ததாக செய்தி வெளியிடுவது வருத்தத்திற்கு உரியது.ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியல்ல.
ஊழல்வாதி
இனி ரெஸ்ட்ரூம் சென்றால்கூட, சொல்லிவிட்டுதான் போக வேண்டும் என்ற அளவுக்கு செய்கின்றனர். அமித் ஷா உடனான சந்திப்பு வெளிப்படையானது. அவரை சந்தித்து விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியே வர எந்த அவசியமும் இல்லை. முகத்தை மூடி கொண்டு சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். சிறுப்பிள்ளை தனமாக முதல்வர் ஸ்டாலின் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல. செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்?
புனிதமாகிவிட்டாரா?
இன்று செந்தில் பாலாஜியை பாராட்டும் இதே முதல்வர் தான், எதிர்க்கட்சியாக இருந்த போது, ''செந்தில் பாலாஜியும், அவர் தம்பியும் கொள்ளை, கடத்தல் என கரூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இப்போது மட்டும் அவர் புனிதமாகிவிட்டாரா என்ன? இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்த போது சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர் இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது.
ஒழுங்கு நடவடிக்கை
திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி முறை கேடு போன்ற தீவிர பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில், நான் முகத்தை மூடியதா பிரச்னை? அண்மை காலமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகின்றனர். கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அதிமுகவில் வழக்கம். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தலைமை முடிவு செய்யும்; உட்கட்சி விவகாரத்தை வெளியே சொல்ல முடியாது.அமித்ஷா அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் என்று தெளிவாக கூறிவிட்டார். தனது எழுச்சி பயணம் சிறப்பாக இருந்ததாக அவர் பாராட்டினார். நான் முகமூடி அணியவில்லை. டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்த படி அதிமுகவிற்குள் நுழைந்தார்.
பாரத ரத்னா
ஜெயலலிதா இருந்த போதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் என்னைப்பற்றி பேசுகிறார். தவிர்க்க முடியாத காரணத்தினால், கட்சியில் சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டது. ஒரு விவசாயி கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகவோ, முதல்வராகவோ வந்தால் எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டும் என்பதற்கு நான் தான் உதாரணம். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என அமித்ஷாவிடம் வலியுறுத்தி உள்ளேன்.
நீட் ரகசியம்
எல்லோரையும் பஸ் எடுக்க வைத்திருக்கிறது அதிமுக. எனக்கு பல்லாயிரம் கோடி கிடையாது. அதனால் அமித்ஷாவை சந்திக்க கிடைத்த காரில் செல்கிறேன். முதல்வர் வெளிநாட்டில் எங்கெல்லாம் சென்றார் என யாருக்கேனும் தெரியும்? நீட் விவகாரத்தில் ஸ்டாலின் பேசுவதெல்லாம் பொய். நீட் விவகாரத்தில் தொடர்ந்து ஸ்டாலின் ஏமாற்றுகிறார். பொய் பேசி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்ன ஆனது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.