அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை
அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை
UPDATED : செப் 28, 2025 09:52 PM
ADDED : செப் 28, 2025 08:19 PM

கரூர்: 'எந்த அரசியல் கூட்டமா இருந்தாலும் இனிமே ஒரு கண்ட்ரோல் வேண்டும்' என்று கரூர் கூட்ட நெரிசலில் 2 மகள்களை இழந்த தந்தை பெருமாள் வேதனையுடன் தெரிவித்தார்.
கரூரில் விஜயின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியான கோகிலா, அவரது சகோதரியான 11 வயதுடைய பழனியம்மாள் உயிரிழந்தனர். 2 மகள்களை இழந்த தந்தை பெருமாள் உருக்கமான பேட்டி:
வீட்டில் மொத்தம் நான்கு பேர் விஜய் பிரசார மீட்டிங்கிற்கு சென்றார்கள். 5:30 மணிக்கு கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்கள் என எனக்கு தகவல் வந்தது. உடனே நான் கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றேன்.
பொண்டாட்டி, பிள்ளைகள் எங்கு இருக்கு என்று எனக்கு தெரியவில்லை. பின்னர் மனைவி மற்றும் பெரிய மகளை கண்டுபிடித்து விட்டேன். பிறகு இரண்டு பிள்ளைகளை நான்கு, ஐந்து மருத்துவமனைகளில் தேடிப் பார்த்தேன். எங்குமே கிடைக்கவில்லை. பிறகு அரசு மருத்துவமனையில் இரண்டு பிள்ளைகள் இறந்து விட்டதாக கண்டுபிடித்தேன்.
ரசிகர்கள் என்று யாரும் கிடையாது. நடிப்பதை கண்டு நேரில் பார்ப்பதற்கு சென்றவர்கள் தான். டிவியில் தான் பார்த்திருக்கிறோம் என்று நேரில் பார்க்க சென்றவர்கள் தான். இரண்டு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து விட்டது. அவ்வளவு ரணகளமாக இருக்கிறது.
எந்த அரசியல் கூட்டமா இருந்தாலும் இனிமே ஒரு கண்ட்ரோல் வேண்டும். அதற்கான நிபந்தனைகளை விதிக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளையும் ஒரே குழியில் போட்டுவிட்டு வந்த எனக்கு எவ்வளவு வேதனை இருக்கும். சொத்துக்கள் எல்லாம் பிறகு, எனக்கு எவ்வளவு வேதனை இருக்கிறது தெரியுமா? சோறு சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.