பீஹார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி: ராமதாஸ் காட்டம்
பீஹார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி: ராமதாஸ் காட்டம்
UPDATED : செப் 24, 2025 03:33 PM
ADDED : செப் 24, 2025 02:04 PM

சென்னை: பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறி மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றிருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி விவரம்;
பொய், பொய்யாக பேசிய அன்புமணியின் வேஷம் கலைந்துவிட்டது. பை, பையாக பொய் சொன்னவர்கள் அய்யோ பொய் சொல்லி விட்டோமோ என்று ஏங்க போகின்றனர். அந்தளவுக்கு வேலை (நடவடிக்கையை குறிப்பிடுகிறார்) நடந்து கொண்டு இருக்கிறது.
உண்மையாகவே நான் 46 வருஷம் ஓய்வின்றி உழைத்துக் கொண்டு வருகிறேன். ஆனால் இன்றைக்கு சில கும்பல், பாமக என்று சொல்லிக் கொண்டு போய் வருகின்றனர். அவர்களின் வேஷம் நிச்சயமாக கலைந்து விடும். கலைக்கப்படும்.
மாநில செயற்குழுவில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கார்கள் மட்டும் 800 கார்கள் வந்திருக்கின்றன. மகளிர் மாநாடு பூம்புகாரில் கட்டுக் கடங்காத கூட்டம். பாமக என்றால் நாங்கள் (அன்புமணியை குறிப்பிடுகிறார்) தான் சொன்னால், சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அது ஒரு கும்பல், அந்த கும்பலின் வேஷத்தை கலைச்சிட்டோம். எப்போது கட்சியை விட்டு நீக்கினோமோ, அன்றைக்கே அவர்களின் வேஷம் கலைந்துவிட்டது.
தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தரப்பு போலியாக ஆவணம் தந்து மாம்பழம் சின்னம் பெற்றுவிட்டனர். அவர்கள் எல்லாம் போலி ஆசாமிகள்.
அப்போது பீஹாரில் பாமக போட்டியிடுவதாக சொல்கிறார்களே, அங்கு அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறார்களே? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராமதாஸ், தென் கொரியா, ஜப்பான், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் கூட மாம்பழம் சின்னத்தில் அவர்கள்(அன்புமணி தரப்பு) போட்டியிட போகிறார்கள்.
இவ்வாறு ராமதாஸ் பேட்டி அளித்தார்.