பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: தினகரன் திட்டவட்டம்
பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: தினகரன் திட்டவட்டம்
ADDED : செப் 25, 2025 02:47 AM

சென்னை: ''பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால், கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பில்லை,'' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோதுதான், அவரது முயற்சியால், கூட்டணியில் அ.ம.மு.க., இணைந்தது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம்.
கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்தபோது, 'அவசரப்பட வேண்டாம்' என்றார். என்னை நேரில் சந்தித்தபோதும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருந்தால், மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என, அவரிடம் கூறி விட்டேன்.
'பழனிசாமியை முதல்வராக்க, தே.ஜ., கூட்டணியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறுவது நியாயமாக தெரியவில்லை.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல, நான் தயாராக இருந்ததாக, சிலர் சொல்கின்றனர். இதற்காக பழனிசாமி எங்களை சந்திக்க முயற்சித்ததாகவும் சொல்கின்றனர். எங்களுக்கு துரோகம் செய்த பழனிசாமிக்கு, எப்படி எங்களை சந்திக்க தைரியம் வரும்?
சில நண்பர்கள் விரும்பியதால், அதற்கான முயற்சியை எடுக்கும்படி நான் கூறினேன். அது உறுதியாக நடக்கப் போவது இல்லை என்பது, எனக்கு தெரியும்.
டில்லியில் இருந்து வந்த தலைவர்களிடமும், இதை எழுதி கொடுத்து விட்டேன். அ.தி.மு.க.,வில் இருந்து என்ன காரணம் கூறி வெளியே வந்தேனோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பர்களும் இல்லை என்று சொல்வர். ஆனால், துரோகியை நண்பராக ஏற்றுக்கொள்வது அரசியலில் இல்லை. ஆட்சியை காப்பாற்றி தந்த எங்களுக்கு, பழனிசாமி துரோகம் செய்து விட்டார்.
பழனிசாமி ஆட்சியில் மே தின கூட்டத்தை கூட, போலீஸ் அனுமதியுடன்தான் நடத்தினோம். பல்வேறு அடக்குமுறைகளை எங்கள் கட்சியினர் மீது, பழனிசாமி நிகழ்த்தினார்.
கைதுகள், வழக்குகள், அதையெல்லாம் தாண்டி, அ.ம.மு.க., நிமிர்ந்து நிற்கிறது. பிள்ளை பிடிப்பவர்கள் போல, பலரது கஷ்டங்கள் தெரிந்து, 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் கொடுத்து, மாவட்டச் செயலரை விலைக்கு வாங்கினர். எங்களை அழிக்க நினைத்தவர்களிடம், எப்படி கூட்டணி போக முடியும்?
அ.தி.மு.க.,வில் மற்ற யார் மீதும், எங்களுக்கு மனஸ்தாபம் இல்லை. கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை ஏற்பதில், எங்களுக்கு சங்கடம் கிடையாது.
முதல்வர் வேட்பாளராக யார் இருக்கக் கூடாது என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அமித் ஷா அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை, நாங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், கூட்டணியை ஆதரிப்போம்.
ஆட்சியின் கடைசி காலத்தில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முடிவை, பழனிசாமி வெளியிட்டார்.
இதனால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பு உருவானது. பழனிசாமியை ஆதரித்து ஓட்டுக் கேட்க போனால், எங்களுக்கு ஓட்டளித்து வந்த மக்கள், எதிராக திரும்புவர்.
சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும். அரசியலில் துரோகத்தை முற்றிலும் வீழ்த்தி, மீண்டும் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க.,வை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.