UPDATED : செப் 14, 2025 10:28 PM
ADDED : செப் 14, 2025 05:43 AM

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் பி.சி.சி.ஐ.,க்கு எதிர்ப்பு வலுக்கிறது. மனசாட்சியுள்ள 140 கோடி இந்திய மக்களும் பாகிஸ்தான் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. ரத்தம் சிந்திய நம் உறவுகளை பற்றி கவலைப்படாமல், ஆசிய கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோத உள்ளன. நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இப்போட்டிக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தேசப்பற்று கொண்ட இந்திய ரசிகர்கள் எதிர்க்கின்றனர்.
திவேதி கோபம்
இது குறித்து பஹல்காம் தாக்குதலில் கணவரை பறிகொடுத்த ஐஷன்யா திவேதி கூறுகையில்,''இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்திருக்க கூடாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. நமது கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கின்றனர்? ஒரு சிலரை தவிர மற்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென குரல் கொடுக்கவில்லை.
இவர்களை துப்பாக்கி முனையில் பி.சி.சி.ஐ., விளையாட வைக்க முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் நாட்டுக்காக நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும். இதை செய்ய தவறிவிட்டனர்.
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் தாக்குதலுக்கு தான் பயன்படுத்தும்.இதை ஒளிபரப்பு நிறுவனம், 'ஸ்பான்சர்'கள் புரிந்து கொள்ளாதது புதிராக உள்ளது. இந்த போட்டியை 'டிவி' மூலம் பார்க்காமல், இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்,'' என்றார்.
சிவசேனா (யுபிடி) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில்,''ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றனர். இப்போது கிரிக்கெட்டும் ரத்தமும் மட்டும் ஒன்றாக பாயுமா? ஒரே நேரத்தில் போரும் கிரிக்கெட்டும் நடக்குமா? வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு போட்டியை நடத்துகின்றனர்,''என்றார்.