விஜய் பிரசாரத்தில் கல்வீச்சு நடக்கவில்லை: ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
விஜய் பிரசாரத்தில் கல்வீச்சு நடக்கவில்லை: ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல்
UPDATED : செப் 29, 2025 07:55 AM
ADDED : செப் 29, 2025 12:40 AM

கரூர்: ''கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் உண்மையில்லை. அவரது பிரசாரத்தின் போது, கல்வீச்சு சம்பவம் எதுவும் நடக்கவில்லை,'' என, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
கரூர் வேலுச்சாமி புரத்தில், நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். கூட்டாக பேட்டி இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், கரூர் கலெக்டர் தங்கவேல், தமிழ்நாடு மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜ லட்சுமி ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.
ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாவது: கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு, போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்ற தகவல் உண்மையில்லை. த.வெ.க., சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டனர். அது, மிகவும் ஆபத்தான பகுதி. அங்கு பெரிய பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு மற்றும் மேம்பாலம் உள்ளது. அதிக கூட்டம் சேரும் அபாயம் இருந்ததால், அந்த இடம் கொடுக்கப்படவில்லை.
அதன்பின், உழவர் சந்தை மைதானத்திற்கு அனுமதி கேட்டனர். அதுவும் குறுகலான பகுதி. இதுபோன்ற கூட்டத்தை சமாளிப்பது கடினம். கடந்த 26ல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மனு கொடுத்து அன்றைக்கே அனுமதி வழங்கப்பட்டது. இந்த பிரசாரத்திற்கு, எஸ்.பி., மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி., 17 இன்ஸ்பெக்டர்கள், 58 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குளறுபடி எதுவும் இல்லை.
கரூர் பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரசாரத்திற்கு அனுமதி கொடுக்கும் போதே, 'போதுமான ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்' என, விதிமுறை கொடுக்கப்பட்டது. அதற்காக, காவலர் குடியிருப்புக்கு அருகே இரண்டு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. நிகழவில்லை இந்த சம்பவம் நடந்த தகவல் கிடைத்தவுடன், தனியார் மருத்துவமனையில் இருந்து, 10 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.
அடுத்ததாக பிரசாரத்தின் போது, கல்வீச்சு நடந்ததாக தெரிவிக்கின்றனர். போலீஸ் விசாரித்தவரை, அதுபோன்ற சம்பவம் ஏதும் நிகழவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், மதியம், 12:00 மணிக்கு துவங்க வேண்டிய பிரசாரம் மாலை 4:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.இதனால், கரூருக்கு விஜய் வரும் போது மாலை 6:00 மணி ஆகிவிட்டது. கரூர் - ஈரோடு சாலை முனிப்பன் கோவில் அருகில் மக்களை பார்த்து கையசைத்து வந்த விஜய், மீண்டும் வண்டிக்குள் சென்றார்.
இதனால், அவரை பார்ப்பதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. அவரை பின் தொடர்ந்து வந்த கூட்டமும், வண்டி கூடவே சென்றது. விஜய் பேசும் இடத்திற்கு செல்ல ஒரு மணி நேரமானது. அவரை பார்ப்பதற்காக இரண்டு பக்கமும் கூட்டம் நகர்ந்த போது, ஏதோ ஒன்று நடந்துள்ளது. அதுபற்றி தான் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின் தடை ஏற்பட்டதா?
த.வெ.க., தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. அனைத்து புகைப்படங்களிலும், சம்பவம் நடந்த போது தெருவிளக்குகள் மற்றும் கடைகளில் வெளிச்சமிருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே, விஜய் பேசிக்கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டது என்ற கருத்து திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. கூட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர், போகஸ் லைட்டுகள் கூட்ட நெரிசலால் அணைக்கப்பட்டன. - ராஜலட்சுமி தமிழ்நாடு மின்வாரிய தலைமை பொறியாளர்
மருத்துவ குழுவை அனுப்பினார்
நெரிசலால், 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர செய்தியை கேள்விப்பட்டதும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டார். மேலும், திண்டுக்கல், திருச்சி கலெக்டர்களையும் அனுப்பி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 114 டாக்டர்கள், 23 செவிலியர்கள் உட்பட மருத்துவ குழுவையும் கரூருக்கு அனுப்பி வைத்தார். - தங்கவேல் கரூர் கலெக்டர்