UPDATED : மே 18, 2025 02:34 AM
ADDED : மே 18, 2025 02:32 AM

ஆப்பரேஷன் சிந்துாரின் போது, பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களை, வானிலேயே தாக்கி அழித்தது நம் ராணுவம். இதற்கு பயன்பட்டது, ரஷ்யாவின் 'எஸ்-400' மற்றும் இந்தியா தயாரித்த 'ஆகாஷ்தீர்' ஏவுகணைகளும் தான்!
இந்த எஸ்-400 ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை; 600 கி.மீ., வரை சென்று, எதிரி விமானங்களை தாக்கும். உலகிலேயே அதிக துாரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் இவை தான். பகவான் கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தின் பெயரைத் தான், இந்த ஏவுகணைகளுக்கு வைத்துள்ளது நம் விமானப்படை.
கடந்த 2018ல் இந்த ஏவுகணைகளை வாங்க, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டபோது, அமெரிக்கா எதிர்த்தது. 'இதை வாங்கினால், பல தடைகளை சந்திக்க வேண்டும்' என, அப்போதைய அமெரிக்க அதிபரான பைடன் அரசு எச்சரித்தது. ஆனால், 'பாகிஸ்தானையும், சீனாவையும் எதிர்கொள்ள, எஸ்400 ஏவுகணைகள் தேவை' என்பதை உணர்ந்த மோடி, உலக எதிர்ப்புகள் எதையும் பொருட்படுத்தாமல் அவற்றை வாங்கினார்.
ஆப்பரேஷன் சிந்துாரில் இந்த ஏவுகணைகள் இந்தியாவை பாதுகாத்தன. மேலும், பல ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க மோடி முடிவெடுத்துள்ளாராம்.