தி.மு.க.,விற்கு முடிவு கட்டுவோம் 'போட்டா - ஜியோ' கொந்தளிப்பு
தி.மு.க.,விற்கு முடிவு கட்டுவோம் 'போட்டா - ஜியோ' கொந்தளிப்பு
UPDATED : ஏப் 04, 2025 06:36 AM
ADDED : ஏப் 04, 2025 02:08 AM

சென்னை:''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு முடிவுகட்டும் கூட்டமாக நாங்கள் உள்ளோம்,'' என, 'போட்டா - ஜியோ' மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி கூறினார்.
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'போட்டா - ஜியோ' சார்பில், 1-0 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் எழிலகம் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பலமுறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும்' என்றார்.
தி.மு.க., ஆட்சி அமைத்து, நான்கு ஆண்டுகளாகியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை; இது, வேதனையாக உள்ளது. நிதி இல்லை எனக்கூறி, தி.மு.க.,வினர் நான்கு ஆண்டுகளை ஓட்டி விட்டனர்.
தற்போது பழைய ஓய்வூதியத்திற்கு ஒன்பது மாதம், சரண் விடுப்பிற்கு ஓராண்டு இலக்கு நிர்ணயித்து, ஐந்தாம் ஆண்டை ஓட்ட முதல்வர் முடிவு செய்துள்ளார். இத்தகைய போலியான அறிவிப்பினை, பட்ஜெட்டில் அறிவிக்காமல், தமிழக அரசு இருந்திருக்கலாம். வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு முடிவு கட்டும் கூட்டமாக நாங்கள் உள்ளோம்.
தற்போது தலைமை செயலகம் உள்ளிட்ட, அனைத்து துறை அரசு ஊழியர்களும், தி.மு.க.,வுக்கு எதிராக, கடும் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே, வரும் மானிய கோரிக்கையில், விதி 110ன் கீழ், பழைய ஓய்வூதியத்துடன் கூடிய சரண் விடுப்பு மற்றும், 21 மாத நிலுவை தொகையை அறிவிக்க வேண்டும்.
மானிய கோரிக்கையில், எங்கள் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு வராவிட்டால், வரும், 25ம் தேதி ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, மிகப்பெரிய போராட்டத்தை துவக்குவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

