கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகி, யூடியூபர் கைது
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகி, யூடியூபர் கைது
ADDED : செப் 30, 2025 09:32 AM

கரூர்: தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ், பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (செப் 30) கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜெரால்டு கைது
கரூர் துயரச் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் தவெகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாஜவைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட பாஜ பிரமுகர் சகாயம், தவெக உறுப்பினர்கள் சிவனேசம் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.