ADDED : மே 11, 2026 02:23 AM
பதவியேற்பு விழாவில், முக்கிய விருந்தினர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், உயர் அதிகாரிகள் உட்பட 5,000 பேர் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் ஈடுபட்டனர்
வழக்கமாக முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் திரையுலக பிரபலங்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்கவில்லை
தொண்டர்கள் அதிகளவில் வருவர் என்ற அச்சத்தில், சாலையில் அவர்கள் இறங்கி செல்லாதபடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் துவங்கி, நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள ராஜா முத்தையா சாலை வரை உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன
விழாவில், முதல்வரின் பெற்றோர் சந்திரசேகர் - ஷோபா மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். நடிகை த்ரிஷா, நடிகர் ஜெய் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். த்ரிஷா விழா அரங்கிற்குள் நுழைந்ததும், தொண்டர்கள் அவர் பெயரை கூறி உற்சாக குரல் எழுப்பினர். அவர் கைகளை உயர்த்தி, நாலாபுறமும் திரும்பி நன்றி தெரிவித்தார்
த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - வி.சி.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். வி.சி.க., தலைவர் திருமாவளவன் டில்லி சென்றதால் பங்கேற்கவில்லை. அவரது கட்சி எம்.எல்.ஏ., வன்னியரசு பங்கேற்றார்
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், தனியார் இனிப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வறுத்த முந்திரி, மிளகு சேவு, மைசூர்பா, டெட்ரா பேக்கில் மசாலா மோர், தண்ணீர் பாட்டில் போன்றவை வழங்கப்பட்டன.
த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், அமைச்சராக பதவியேற்பு உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்த பின், கையெழுத்து போடுவதற்கு முன், விஜயை பார்த்து அனுமதி கேட்டார். விஜய் தலை அசைத்ததும் கையெழுத்து போட்டார்
அமைச்சராக செங்கோட்டையன் பதவி ஏற்ற போது, பார்வையாளர்கள் அரங்கம் அதிர விசில் சப்தம் எழுப்பினர்
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
தொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த முதல்வர் விஜய், ஒரு கட்டத்தில் லேசாக கண் கலங்கினார். பதவியேற்பு உறுதிமொழியை பார்க்காமலே விஜய் கம்பீரமாக வாசித்தார்
கடந்த 2006ம் ஆண்டுக்கு பின், முதல்வர் பதவியேற்பு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது
த.வெ.க., - எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், போலீசார் கெடுபிடி காரணமாக காரில் வராமல், மோட்டார் சைக்கிளில் விழா அரங்கிற்கு வந்தார்
போலீசார் கெடுபிடி அதிகமிருந்தும், விஜயை காண ஏராளமானோர் திரண்டனர்
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, நடிகர் சங்கம் உள்ளிட்ட திரையுலக அமைப்புகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை
விழாவில், திரையுலகை சேர்ந்த த்ரிஷா, சஞ்சீவ், ஸ்ரீமன், லியோ பட தயாரிப்பாளர் லலித், கோட் பட தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா, பாடலாசிரியர் விவேக், நடிகை சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
