தேசம் முன்னேறுவதை தடுக்கும் அரசியல்வாதிகள்! ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றச்சாட்டு
தேசம் முன்னேறுவதை தடுக்கும் அரசியல்வாதிகள்! ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : செப் 20, 2025 06:29 AM

பொள்ளாச்சி; 'கலகம் ஏற்படுத்தி தேசம் முன்னேறுவதை தடுக்க சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்,' என, ஹிந்து முன்னணி மாநில செயலாளர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலின், 98வது ஜெயந்தி விழா, ஹிந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
அதில், பங்கேற்ற ஹிந்து முன்னணி மாநில செயாலாளர் அண்ணாதுரை, நிருபர்களிடம் கூறியதாவது:
நமது தேசம் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தானை நேரிடையாக எதிர்கொண்டோம். தற்போது, மறைமுகமாக அந்நிய சக்திகள் பல்வேறு வழிகளில், நாட்டை பலவீனப்படுத்த செயலாற்றுகிறது. சமீபத்தில், நேபாளத்தில் ஆட்சியாளர்கள் செய்த ஊழல் காரணமாக மக்கள் வீறு கொண்டு எழுந்து புரட்சி ஏற்படுத்தினர்.ஆனால், நமது நாட்டில் கலகம் ஏற்படுத்தி தேசம் முன்னேறுவதை தடுக்க சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்.
உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ள நமது தேசம் வளரக்கூடாது; பின்தங்கியிருக்க வேண்டும் என நினைக்கும் அந்நிய சக்திகளுக்கு சிலர் துதிபாடும் நிலை உள்ளது. காங்., எம்.பி., ராகுல் சிறுபிள்ளை தனமாக ஓட்டு திருட்டு என, இல்லாத ஒன்றை துாக்கிபிடித்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். ஆப்ரேஷன் சிந்துாரில், எத்தனை விமானங்கள் இழந்தோம் என கேட்கிறார். பாகிஸ்தான் சொன்னதை நம்பி, நம் ராணுவத்தை கொச்சைபடுத்துகிறார். ஹிந்துக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இவற்றை சரி செய்ய வேறுபாடுகளை களைந்து ஒன்றாக நிற்க வேண்டும். ஓட்டுரிமையை நிலைநாட்டினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.