சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
ADDED : செப் 16, 2025 07:50 AM

சென்னை: சென்னை எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. கோடம்பாக்கம், வடபழநி, விருகம்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, நெற்குன்றம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை வரும் மற்றும் இங்கிருந்து உட்பட பல்வேறு நாடுகளுக்குப் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக 317 பயணிகளுடன் தோகாவில் இருந்து வந்த விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பறந்துவிட்டு தரையிறங்கின. தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழைப்பதிவு
சென்னை சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் தலா 120 மி.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 90 மி.மீ., மழை பெய்துள்ளது. செங்குன்றம், திருவள்ளூரில் தலா 30 மி.மீ., ஆர்.கே.பேட்டை, பூவிருந்தவல்லியில் தலா 20 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.