அனைத்து சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பு கட்டாயம்
அனைத்து சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பு கட்டாயம்
ADDED : ஜூன் 10, 2026 05:13 AM

சென்னை: ''தமிழகத்தில் எவ்வித விடுபடுதலும் இன்றி, அனைத்து சர்வே எண்களுக்கும், இம்மாத இறுதிக்குள் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயம் செய்ய வேண்டும்,'' என, பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டார்.
பதிவுத்துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பேசியதாவது:
பத்திரப்பதிவுக்காக வரும் பொது மக்களிடம், சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருப்பவர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பொது மக்களை அமர வைத்து, அவர்களின் தேவைகளை செய்து தர வேண்டும். பதிவு முடிந்த பத்திரங்களை, அதே நாளில் மக்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும். கட்டட களப்பணி தொடர்பான பத்திரங்களை நிலுவை வைக்காமல், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவை பத்திரங்களை, மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வித விடுதலும் இன்றி, உரிய அனைத்து சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்புகளை இணைக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பதிவுத்துறை செயலர் குமரகுருபரன், பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
