ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் கைகளில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்கள் கைகளில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
UPDATED : செப் 19, 2025 09:34 PM
ADDED : செப் 19, 2025 08:51 PM

மதுரை: '' ஜிஎஸ்டி சீரமைப்பு மூலம் மக்களின் கைகளில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும்,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழக உணவுப்பெருட்கள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழா மதுரையில் நடந்தது.
இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
அவசியம் இல்லை
தமிழகத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் புரிந்து கொண்டு தமிழகத்திற்கு நல்லது செய்ய பிரதமர் முன்வந்துள்ளார். ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு, சர்சார்ஜ், செஸ், வாட் என பல வரிகளுடன் ஒரு பொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு விலை இருந்தது. இதனை மாற்ற அனைவருடனும் சேர்ந்து ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வந்த போது அதிக விலை நிர்ணயித்து விட்டு தற்போது குறைப்பது போன்ற நாடகம் நடத்த வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ இல்லை.
2 ஆக குறைப்பு
அப்போது வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி 4 வரி அடுக்குகள் அமைக்கப்பட்டன. சரியான சந்தர்ப்பத்தில் மாற்றம் செய்து வந்தோம். தற்போது மாற்றுகிறோம். பிரச்னைக்கு உரிய பொருட்களின் விலை அடிக்கடி மாற்றினோம். பொருட்களுக்கு எங்கும் அதிக வரி விதிக்க வில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளில் கோவிட் வந்தது. அது அடங்கிய பிறகு பொருளாதாரம் மேம்பட வேண்டும் என பார்த்தோம். தற்போது 365 பொருட்களின் விலையை குறைத்தோம். 4 அடுக்குகளாக இருந்த வரி கட்டமைப்பு 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புரட்சி
இந்தியாவில் தான் கார்ப்பரேட் வரி முதல்முறையாக குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. ஜிஎஸ்டி குறைப்பு 140 கோடி பேர் மீதும் தாக்கம் ஏற்படுத்தும். இது ஒரு புரட்சி. 28 சதவீத வரம்பில் இருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீதம் வரம்பில் வருகிறது.
2017ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது 4 லட்சம் பேர் தான் அதன் வரம்பில் இருந்தனர். ஆனால், தற்போது அந்த வரம்பில் 1.51 கோடி பேர் இருந்தனர்.
இந்த வரியை 'கப்பார் டாக்ஸ்', கொடூரமான வரி என ராகுல் கூறுகிறார். அப்படி இருந்தால் வர்த்தகர்கள் யாரும் இணைந்து இருக்க மாட்டார்கள். ஆனால் வணிகர்கள் அதிகம் பேர் இணைந்துள்ளனர். 22 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி சீரமைப்பு மூலம் மக்கள் கைகளில் ரூ.2 லட்சம் கோடி இருக்கும். வரி கட்டாமல் மக்கள் கைகளில் பணம் இருந்தால் அந்த பணம் உங்களுக்கு சேர்ந்ததாக தான் கணக்கு. பொருளாதார சுழற்சி மூலம் மக்களின் கைகளில் பணம் புரளுவது நாட்டுக்கு நல்லது. 4 வரி அடுக்குகளை 2 ஆக குறைத்ததுடன், ஒவ்வொரு பொருட்கள் மீதும் வரி குறைத்துள்ளோம். இந்த சுழற்சி மூலம் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டு வளர்ச்சி ஏற்படும் போது 2 ஆக இருக்கும் வரி அடுக்கு ஒன்றாக மாற்ற முடியும். தற்போதைக்கு அது முடியாது.
3 நாட்களில்
ஜிஎஸ்டிக்கு முன்பு காப்பீடு மேல் வரி இருந்தது. ஜிஎஸ்டி ரீபண்ட் செய்வதில் முன்பு தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய முறை மூலம் 90 சதவீதம் தானாக உங்கள் கைகளுக்கு வரும். 10 சதவீதம் மட்டும் நிறை குறை பார்த்து விட்டு கிடைக்கும். இனிமேல் பணம் முடக்கம் என்ற கவலை இருக்காது. ஜிஎஸ்டி பதிவும் 3 நாட்களில் முடிந்துவிடும். 25 கோடிக்கு மேற்பட்ட மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். அனைத்து பொருட்களையும் பார்த்து பார்த்து விலை குறைத்துள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.