டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் இபிஎஸ் சந்திப்பு
டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் இபிஎஸ் சந்திப்பு
UPDATED : செப் 16, 2025 12:34 PM
ADDED : செப் 16, 2025 07:20 AM

சென்னை: டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார்.
அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் எழுப்பி இருந்தார். இதற்காக அவர் அளித்த காலக்கெடுவும் இன்று முடிகிறது. செங்கோட்டையனின் இந்த செயல்பாட்டை தொடர்ந்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இபிஎஸ் நீக்கினார்.
இப்படியான பரபரப்பான சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று காலை டில்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டில்லிக்கு சென்றுள்ளார். இன்று மாலை அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என்று தெரிகிறது.
இபிஎஸ் உடன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டில்லிக்கு சென்றிருக்கின்றனர். டில்லி சென்ற இபிஎஸ்சை, விமான நிலையத்தில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, இன்பதுரை, சி.வி.சண்முகம், தனபால் ஆகியோர் வரவேற்றனர்.
ஜெயலலிதா மறைந்த பின்னர், ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்த பாஜவுக்கு நன்றி என்று நேற்றைய தினம் அவர் கூறியிருந்த நிலையில், இன்றைய டில்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.