இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் இரு இடங்களில் இன்று நடக்கிறது
இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னையில் இரு இடங்களில் இன்று நடக்கிறது
ADDED : ஜூன் 13, 2026 02:26 AM

சென்னை; 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தி.நகர், வாணி மகாலில் இன்று காலை 10:00 மணிக்கும்; பூந்தமல்லி குத்தம்பாக்கம் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்தில் பிற்பகல் 3:00 மணிக்கும் நடக்கிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து விட்டு, பி.இ., - பி.டெக்., ஆகிய இன்ஜி., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் டி.என்.இ.ஏ., என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
கலந்தாய்வு
அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கான இடங்கள், தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை கலந்தாய்வின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.
இணையவழி கலந்தாய்வு அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, எந்த கல்லுாரியில், எந்த 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்பது தொடர்பாக, மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலையின் 'ஆன்லைன் கவுன்சிலிங்' குறித்து மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் வெவ்வேறு 'கட் -ஆப்' மதிப்பெண்களுக்கு எந்தெந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆன்லைன் கவுன்சிலிங்கின்போது 'சாய்ஸ் பில்லிங்' எனும் கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை சரியாக எவ்வாறு தேர்வு செய்வது; 'புரொவிஷனல் அலாட்மென்ட்' பெறுவது எப்படி; தற்போதைய சூழலில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள சிறந்த இன்ஜி., பாடப்பிரிவுகள் எவை; சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ள கல்லுாரிகளை எவ்வாறு கண்டறிவது உள்ளிட்ட விஷயங்களுக்கு, நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
அனுமதி இலவசம்
மேலும், இந்தாண்டு கவுன்சிலிங்கில் அரசு செய்துள்ள மாற்றங்கள் குறித்தும், கல்வி ஆலோசகர்கள் விளக்கம் அளிக் கின்றனர்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 - செயலர் டி.புருஷோத்தமன், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் ஜி.நாகராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, ராஜலட்சுமி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி, தமிழகம் முழுதும் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அனுமதி இலவசம்.
