தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எபோலா வைரஸ் - அறிவோம்... கவனமாக இருப்போம்

 எபோலா வைரஸ் - அறிவோம்... கவனமாக இருப்போம்

 எபோலா வைரஸ் - அறிவோம்... கவனமாக இருப்போம்


ADDED : மே 26, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 07:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் சில பகுதிகளில் சில ஆண்டுகளாக கவனத்தை ஈர்த்த தொற்றுநோய்களில் அரிதாக காணப்படும் வைரஸ் தொற்று எபோலா. இந்த வைரஸ் மனிதர்களுக்கும் சில விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

முதன்முதலில் 1976ல் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. எபோலாவும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதிக்கக்கூடியது என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் குணமாகலாம். சாதாரண சளி அல்லது காய்ச்சல் போல காற்றில் எளிதாக பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பரவக்கூடும்.

பரவக்கூடிய சூழல் எது


நோயாளியின் ரத்தம், வாந்தி, வியர்வை அல்லது பிற உடல் திரவங்களை பாதுகாப்பின்றி தொடுவதால் பரவலாம். சுத்தமில்லாத மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துதல், பாதிக்கப்பட்ட விலங்குகளை பாதுகாப்பின்றி கையாளுதல், நோயாளியை பராமரிக்கும் போது தேவையான பாதுகாப்பு முறைகளை பின்பற்றாத நிலையில் எபோலா வைரஸ் தொற்று பரவலாம். அடிப்படை சுகாதார நடைமுறைகள், மருத்துவ பாதுகாப்பு முறைகள் இந்த நோய் பரவலை குறைப்பதில் மிகப்பெரிய பங்குவகிக்கின்றன.

ஆரம்ப அறிகுறிகள் என்ன


பல சமயங்களில் சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போலவே இருக்கலாம். காய்ச்சல், உடல்சோர்வு, தலைவலி, தசைவலி, தொண்டைவலி, உணவு விருப்பம் குறைதல், சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். ஆனால் இந்த அறிகுறிகள் பல்வேறு சாதாரண நோய்களிலும் காணப்படுவதால், டாக்டரின் பரிசோதனையே சரியான முடிவாக இருக்கும். வெளிநாட்டு பயண வரலாறு, தொற்றுப்பகுதிகளுடன் தொடர்பு அல்லது நீடித்த காய்ச்சல் போன்றவை இருந்தால் டாக்டரை அணுகுவது நல்லது. ஆரம்பகட்டத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிதாக்கும்.

பெருந்தொற்றாக மாறுமா


எபோலா காற்று வழியாக பரவுவதில்லை. இது நேரடி உடல் திரவ தொடர்பு மூலமே பரவுகிறது. நோயாளிகள் விரைவில் கடுமையான உடல்நலக்குறைவுக்கு ஆளாகுவதால், நீண்ட துார பயணங்கள் அல்லது மறைமுக பரவல் குறைகிறது. அறிகுறிகள் தெளிவாக தெரியவருவதால் நோயாளிகளை விரைவில் தனிமைப்படுத்தமுடிகிறது. கடந்தகால எபோலா பரவல்களும் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் சுகாதார வசதிகள் குறைவாக இருந்தால் நோய்க்கட்டுப்பாட்டில் சிரமங்கள் உருவாகலாம். தற்போதைய நிலவரப்படி இது கோவிட் - 19 போன்ற வேகமான உலகளாவிய பரவலை ஏற்படுத்தும் நோயாக கருதப்படவில்லை. எபோலா நோயை கட்டுப்படுத்த பல்வேறு ஆதரவு சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உடலின் நீர்ச்சத்தை பராமரித்தல், தேவையான ஊட்டச்சத்து வழங்குதல், உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவை முக்கியமானவை. மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு, தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வசதி, பாதுகாப்பான மருத்துவ நடைமுறைகள், தடுப்பூசி ஆராய்ச்சிகள் முன்பை விட அதிகரித்துள்ளது.

என்ன செய்யவேண்டும்


கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல்நலக் குறைவு இருந்தால் டாக்டரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பொது சுகாதார வழிகாட்டுதல்களை மதித்தால் சமூக பாதுகாப்பிற்கு உதவும். எபோலா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம். உலக காதார அமைப்புகளும் டாக்டர்களும் தொடர்ந்து கண்காணித்து வரும் நோய்களில் இதுவும் ஒன்று. சரியான தகவல், சுகாதார பழக்கவழக்கம், மருத்துவ உதவி இருந்தால் எந்த தொற்று நோயையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.



--டாக்டர் முருகன் ஜெயராமன்

குழந்தைகள் நல சிறப்பு நிபுணர்

மதுரை, 98948 59784

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us