போதைப்பொருள் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் சிக்கிய துணை நடிகர்
போதைப்பொருள் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் சிக்கிய துணை நடிகர்
UPDATED : அக் 01, 2025 10:44 PM
ADDED : அக் 01, 2025 08:25 PM

புதுடில்லி: போதைப்பொருள் கடத்தி வந்து பிடிபட்டவர் பாலிவுட் துணை நடிகர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருக்கு நைஜீரியாவைச் சேர்ந்த கும்பலுடன் தொடர்பு குறித்து தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம், நேற்று முன்தினம்( செப்.,28) இரவு சென்னையில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 30 வயதுடைய வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு முரணாக பதில் அளித்தார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, 3.5 கிலோ எடையுள்ள கோகைன் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் சர்வதேச மதிப்பு 40 கோடி ரூபாய். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட நபர், சர்வேதேச போதை பொருள் கடத்தல் சிண்டிகேட் கும்பலில் தொடர்புடையவர் என்பதால், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பதால், இந்த பயணி, கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளார். அங்கிருந்து, சாதாரண சுற்றுலா பயணி போல சென்னை வந்து, கோகைன் போதைப் பொருளுடன் தப்ப முயன்றுள்ளார்.இந்த கோகைனை பெற்றுக் கொள்ள விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த நபர் தப்பி ஓடி விட்டார். மும்பை மற்றும் டில்லியில் உள்ள சிலருக்கு சப்ளை செய்யவே, போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, சிக்கியவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைதான நபர் பாலிவுட் துணை நடிகர் என தெரியவந்துள்ளது. அவரது பெயர் பிரம்மா(32) என்பதும், அவர் 2012 ல் ஹிந்தியில் வெளியான ' ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2' படத்தில் நடித்துள்ளார். மேலும், அவருக்கு நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்ட அவர், அதற்காக விடுமுறையில் கம்போடியாவுக்கு செல்வதும், அங்கிருந்து திரும்பும்போது போதைபொருளை பையில் மறைத்து கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.