ADDED : ஜூன் 10, 2026 05:08 AM

சென்னை: 'ஆட்டோ கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை, நான் பார்த்துக் கொள்கிறேன். இனி நீங்கள் என்னை பார்க்க வர வேண்டாம்' என, போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறியது, ஓட்டுநர் சங்க நிர்வாகிகளிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013-ம் ஆண்டு மீட்டர் கட்டணத்தை அரசு மாற்றி அமைத்தது. அதன்பின், ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பழையபடி பேரம் பேசி, கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இதற்கிடையே, 'ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஓலா, ஊபர், போர்ட்டர் போன்ற நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம், நேற்று ஓட்டுநர் சங்கங்களின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
இது குறித்து, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜாஹிர்ஹூசேன் கூறியதாவது:
ஆட்டோ கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து பேச, உரிய முன் அனுமதி பெற்று, இரண்டு மணி நேரமாக காத்திருந்தோம்.
அமைச்சர் எங்களை சந்தித்து, மனுவை பெற்றுக் கொண்டு, உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன். அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அத்துடன் இதற்கு மேல், என்னை சந்திக்க வர வேண்டாம் என்றார். இது, எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
