'எல்லைகளை காரணம் காட்டி பொதுமக்களை அலைய விடாதீங்க'
'எல்லைகளை காரணம் காட்டி பொதுமக்களை அலைய விடாதீங்க'
ADDED : ஜூன் 06, 2026 05:35 AM

சென்னை: 'காவல் நிலைய எல்லைகளை காரணமாக கூறி, புகார் வாங்காமல், பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது' என, போலீசாருக்கு, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தர விட்டுள்ளார்.
குற்றம் நடந்த இடம், எந்த காவல் நிலைய எல்லையில் வருகிறது என்பது குறித்து, போலீசாருக்கே தெளிவில்லாமல் உள்ளது. இதனால், காவல் நிலையங்களில் புகார் பெறுவதில், காலதாமதம் ஏற்படுகிறது. பொது மக்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, போலீஸ் நிலையங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் எந்த காவல் நிலைய எல்லைகளில் வசித்தாலும், வழிப்பறி, விபத்து அல்லது ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால், அவர்களை எக்காரணத்தை முன்னிட்டும், புகார் வாங்காமல் அலைக் கழிக்கக் கூடாது.
புகாரை பெற்று, உரிய காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். புகார்தாரர்களுக்கு, போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு எண்களை தெரிவிக்க வேண்டும்.
பொது மக்களிடம் புகார்கள் வாங்க மறுக்கும் போலீசார் மீது, உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
