கலாசாரத்தையும் அறிவையும் பெருக்கியது தருமபுரம் ஆதீனம்: கவர்னர் ரவி புகழுரை
கலாசாரத்தையும் அறிவையும் பெருக்கியது தருமபுரம் ஆதீனம்: கவர்னர் ரவி புகழுரை
ADDED : நவ 03, 2025 12:58 AM

மயிலாடுதுறை: ''ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் தருமபுரம் ஆதீனம் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காத்து, கல்வி அறிவை பெருக்கியது,'' என, தருமபுரம் ஆதீனத்திற்கு கவர்னர் ரவி புகழாரம் சூட்டினார்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணிவிழா, நேற்று முன்தினம் துவங்கியது; வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் நாள் விழா நேற்று மாலை நடந்தது.
தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, மணிவிழா சிறப்பு மலரை வெளியிட்டார். குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை கவர்னர் ரவி வழங்கினார்.
பக்தி அலை பின், கவர்னர் ரவி பேசியதாவது:
தருமபுரம் ஆதீனம், நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும், சனாதன தர்மத்திற்கும் 500 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி வருகிறது.
தமிழ் மண்ணில் இருந்தே பக்தி என்ற அலை இந்தியா முழுதும் பரவியது. 5,000 ஆண்டுகால வரலாற்றில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், கஷ்டமான காலங்கள் வந்த போதெல்லாம், ஆதீனங்கள் தான் சமுதாயத்தை காப்பாற்றின. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூட இந்த ஆதீனம் தன் பணியை நிறுத்தவில்லை.
அழிக்க முயற்சி அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நம் கலாசாரம், அடையாளம், மொழி ஆகியவற்றை அழிக்க முயன்றனர்.
ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை வெறுத்தவர்கள். அவர்கள் தமிழை மொழி என்றே அழைக்கவில்லை.
அப்படிப்பட்ட ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் தருமபுரம் ஆதீனம் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காத்து, கல்வி அறிவை பெருக்கியது.
இன்றுகூட, இந்த ஆதீனம் ஆன்மிகப் பணியுடன் சேர்த்து சமுதாய சேவையையும் செய்கிறது.
இப்போது பாரத தேசம் உயர்ந்து வரும்போது, சமுதாயத்தை வழிநடத்தும் ஆன்மிக தலைவர்களாக, 27-வது குரு மகா சன்னிதானம் போன்றவர்கள் தேவை.
இப்போது 60 வயதை அடைந்துள்ள இளைஞரான குரு மகா சன்னிதானம், 120 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீராமானுஜர், 119 ஆண்டுகள் வாழ்ந்த சங்கரதேவர் போன்று நீண்ட ஆயுளுடன், தேசத்திற்கும், சமுதாயத்திற்கும் தொடர்ந்து சேவை செய்ய சிவபெருமான் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

