சிறை பண்ணைகளில் செத்து மடியும் கோழிகள்: புழலில் மட்டும் 1,200 பலி புழலில் மட்டும் 1,200 கோழிகள் பலி
சிறை பண்ணைகளில் செத்து மடியும் கோழிகள்: புழலில் மட்டும் 1,200 பலி புழலில் மட்டும் 1,200 கோழிகள் பலி
ADDED : செப் 16, 2025 07:34 AM

சென்னை : போதிய பயிற்சியின்மை, பராமரிப்பதில் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால், மத்திய சிறைகளில் உள்ள பண்ணைகளில், கோழிகள் செத்து மடிவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள சிறைகளில், விசாரணை, தண்டனை கைதிகள் என, 21,000 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். அசைவ உணவு பிரியர்களான கைதிகளுக்கு வாரம் ஒரு முறை, 115 கிராம் சமைத்த கோழிக்கறி வழங்கப்படுகிறது.
இதற்கு ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகி வந்தது. இதை கட்டுப் படுத்தும் விதமாக, சென்னை புழல், வேலுார், மதுரை, பாளையங்கோட்டை உட்பட, ஒன்பது மத்திய சிறைகளில் கோழிப் பண்ணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, கைதிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.
இதில் வளர்க்கப்படும் 40 சதவீத கோழிகள் கைதிகளுக்கும், 60 சதவீத கோழிகள் பொது மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சில மாதங்களாக, சிறை பண்ணைகளில் கோழிகள் திடீரென செத்து மடிவதாக கூறப்படுகிறது.
சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, கைதிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அவர்க ளால் கோழிகளை நல்ல முறையில் வளர்க்கவும் முடியவில்லை. தீவனத்தையும் அளவுக்கு அதிமாக கொடுத்து விடுகின்றனர். இதனால், கோழிகள் செத்து மடிகின்றன. கடும் வெப்பம் காரணமாகவும் உயிரிழக்கின்றன.
நேற்று முன்தினம் மட்டும், புழல் மத்திய சிறையில், 1,200 கோழிகள் செத்து மடிந்தன. இக்கோழிகள், அதிகாரிகளின் உத்தரவின்படி மண்ணில் புதைக்கப்பட்டு உள்ளன. இனியும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, தகுதியானவர்களை பண்ணை பராமரிப்புக்கு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.