கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு சி.பி.ஐ., 'சம்மன்'
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு சி.பி.ஐ., 'சம்மன்'
ADDED : நவ 03, 2025 05:13 AM

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 306 பேருக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
கடந்த செப்., 27ம் தேதி, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதை, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
கரூரில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆட்கள் கொள்ளளவு குறித்து, துல்லியமாக அளவீடு செய்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம், கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க.,வினர் என, 306 பேர் விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலும் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

