கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க எம்.பி.,க்கள் குழுவை நியமித்தது பா.ஜ.,
கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க எம்.பி.,க்கள் குழுவை நியமித்தது பா.ஜ.,
ADDED : செப் 30, 2025 08:04 AM

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் குழுவை பா.ஜ., அமைத்து உள்ளது.
கரூரில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரசாரத்தில் திரண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்து, விசாரித்து, அறிக்கை அளிப்பதற்காக, பா.ஜ., - - எம்.பி., ஹேமமாலினி தலைமையில் எட்டு பேர் குழுவை பா.ஜ., தேசிய தலைமை அமைத்துள்ளது.
அந்த குழுவில், பா.ஜ., சார்பில்- எம்.பி.,க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரிஜ்லால், அபராஜிதா சாரங்கி, சிவசேனா சார்பில் எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே, தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவியும், பா.ஜ., - எம்.பி.,யுமான ரேகா ஷர்மா, தெலுங்குதேசம் எம்.பி., புட்ட மகேஷ் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
ஹேமமாலினி தலைமையிலான இந்த தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் குழு, கரூர் சென்று, உயிர்இழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும்.
மேலும், அந்த நெ ரிசல் சம்பவம் எப்படி ஏற்பட்டது; அங்குள்ள சூழ்நிலை என்ன என்பதை ஆராய்ந்து, விரைவில் அறிக்கை அளிக்கு மாறு, குழுவினருக்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தர விட்டுள்ளார்.
இந்த தகவலை, பா.ஜ., தேசிய பொதுச்செயலர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.
-- நமது டில்லி நிருபர் --