ADDED : செப் 25, 2025 03:07 PM

சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை தேர்தல் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியும் சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளார்.
இந்த தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் பாஜ கூட்டணி சேர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணியை உறுதி செய்தார். தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அதற்கு மேலிட தலைவர்களை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதன்படி
தேர்தல் பொறுப்பாளராக - பைஜெயந்த் பாண்டா ( தேசிய துணைத்தலைவர்)
இணை தேர்தல் பொறுப்பாளராக - முரளிதர் மொஹோல் ( மத்திய இணையமைச்சர்) ஆகியோரை நியமித்து பாஜ தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் உத்தரவிட்டுள்ளார்.