அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம்; பாமகவை உரிமை கொண்டாட முடியாது; ராமதாஸ்
அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம்; பாமகவை உரிமை கொண்டாட முடியாது; ராமதாஸ்
ADDED : செப் 11, 2025 11:52 AM

விழுப்புரம்: 'அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம். பாமக நான் தொடங்கிய கட்சி. இதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை,' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, பாமக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.
இது தொடர்பாக தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இருமுறை அவகாசம் கொடுத்தும் பதில் ஏதும் எழுத்துப்பூர்வமாகவோ, நேரில் வந்தோ விளக்கம் அளிக்கவில்லை. இந்த செயல் அவர் மீது சொல்லப்பட்ட 16 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.
தகுதியற்றவர்
அன்புமணி செய்தது, இதுவரை எவரும் செய்திடாத மிக மோசமான செயல். கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாத தான்தோன்றி தனமான செயல் மட்டுமின்றி, ஒரு அரசியல்வாதிக்கு தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். பாமக அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மனம் புண்படும்படியாக நடந்துள்ள இந்த செயல், கட்சியைஅழிக்கும் ஒரு முயற்சி என தெரிய வருவதால், கட்சி விரோத போக்கு நடவடிக்கை என்று முடிவு செய்யப்படுகிறது.
எனவே, அன்புமணியை செயல்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு அவரது நடவடிக்கை மற்றும் போக்கு, மிகப்பெரிய குந்தகம் விளைவிக்கும் என்பதால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
மன்னிக்கத் தயார்
கட்சியில் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அன்புமணியுடன் இருக்கும் 10 பேர் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களை மன்னிக்கத் தயார். அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டேன். உதவி செய்தேன். இதை சொல்லிக்காட்டுவது நன்றாக இருக்காது என்றாலும், அவர்கள் யார் என்பதை இந்த நேரத்தில் சொல்ல தேவையில்லை. அன்புமணியுடன் இருந்தால் அவர்களுக்கு பலவித உதவிகள் கிடைக்கும் என்பதால் கூட அவருடன் இருந்திருக்கலாம். நான் இல்லாமல் அவர்கள் வளர்ந்திருக்க முடியாது.
இனிஷியல் மட்டும்
ஒரு நான்கைந்து பேர் அப்பா சொல்வதை கேட்டு நடக்குமாறு சொல்லியும், அன்புமணி அதனை கேட்கவில்லை. பழ.கருப்பையா கூட தந்தையிடம் மகன் தோற்பது பெரிய தவறல்ல என்று பலமுறை அறிவுரை சொல்லி இருக்கிறார். இதுபோன்ற பல மூத்தோர் அறிவுரை சொன்னாலும் கூட, அவர் எதையும் கேட்காமல், இந்த நிலைக்கு வருவதற்கு காரணமாகி விட்டார்.
அன்புமணி என்னுடைய இன்ஷியலை போட்டுக் கொள்ளலாம். 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். கட்சியில் சேருபவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை வழங்கினேன்.
தனிக்கட்சி
அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு முன்பு 3 முறை சொல்லியுள்ளேன். இப்போதும் சொல்கிறேன், அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம். பாமக நான் தொடங்கிய கட்சி. இதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை.
இது பாமகவுக்கு பின்னடைவு கிடையாது. ஒரு பயிரிட்டால் அதில் களை முளைக்கத்தான் செய்யும். களை முளைக்குமே என்று யாரும் பயிரிடாமல் இருப்பதில்லை. நாங்கள் களையை நீக்கி விட்டோம்.
என்னோடு 40 முறை பேசியிருப்பதாக சொல்லியிருக்கிறார். அது பொய். பேசுவது எல்லாம் பொய். லண்டனில் இருந்து ஒரு கருவியை வாங்கி என்னுடைய சோபாவில் வைத்தார்கள். இது மோசமான செயல். என்னை பிறர் வேவு பார்க்கலாம். அன்புமணி வேவு பார்க்கலாமா?. அரும்பாடு பட்டு வளர்த்த கட்சி அன்புமணியால் அழிகிறது, என்று கூறினார்.