வீட்டுவசதி வாரிய அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி அதிகாரம்: அரசு உத்தரவு
வீட்டுவசதி வாரிய அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி அதிகாரம்: அரசு உத்தரவு
ADDED : செப் 16, 2025 07:35 AM

சென்னை : கட்டடங்கள் பழுது பார்ப்பு பணிகள் தொடர்பாக, நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டுவசதி வாரியம் சார்பில், மாவட்டங்களில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் வாடகை வீடுகள், விற்காமல் உள்ள குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பு, வாரியத்திடமே உள்ளது.
இவ்வாறு பராமரிப்பு, சீரமைப்பு, புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளும்போது, எந்த பணிக்கு யார் ஒப்புதல் அளிப்பது என்பதில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அமலில் உள்ள நிதி அதிகார வரம்புகள், தற்போதைய சூழல், விலைவாசிக்கு ஏற்றதாக இல்லை.
எனவே, சிறிய அளவிலான பணிகளுக்கும் நிர்வாக இயக்குநரிடமும், வாரிய நிர்வாகக் குழுவிடமும் ஒப்புதல் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், கட்டட பழுதுபார்ப்பு, பராமரிப்பு பணிகள் தாமதமாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, காலத்துக்கு ஏற்ப, வாரிய அதிகாரிகளின் நிதி அதிகார வரம்புகளை மாற்றி அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ள அரசாணை:
வாரிய குடியிருப்புகள், வணிக கட்டடங்களை பராமரிப்பதில், நிதி அதிகார வரம்புகளை தற்போதைய சூழலுக்கு ஏற்ப திருத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வீட்டு வசதி வாரிய சட்டத்தில், 13 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, வாரிய கட்டடங்களில் பழுதுபார்ப்பு, புதுப்பிப்பு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குவதில், செயற்பொறியாளருக்கு 10,000 ரூபாய் என இருந்த அதிகார வரம்பு, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளருக்கு 25,000 ரூபாயாக இருந்த அதிகார வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தலைமை பொறியாளருக்கு 1 லட்சம் ரூபாயாக இருந்த அதிகார வரம்பு, 5 லட்சம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குநருக்கு 15 லட்சம் ரூபாயாக இருந்த அதிகார வரம்பு, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
இதேபோன்று, பணிகளுக்கான டெண்டர் மதிப்புகளை உயர்த்துவதிலும், நிதி அதிகார வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.