அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை எதிர்த்த நடிகை மனு தள்ளுபடி
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை எதிர்த்த நடிகை மனு தள்ளுபடி
ADDED : செப் 24, 2025 05:36 AM

பாலியல் வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி, நடிகை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது, நடிகை சாந்தினி என்பவர் 2021ல் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார்.
அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதுடன், தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தான் கர்ப்பமானது தெரிந்தவுடன் கருவை கலைக்க செய்ததாகவும், இதுபற்றி வெளியே சொன்னால் தன் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக 2021ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்த ஜாமின் உத்தரவை எதிர்த்து நடிகை சாந்தினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின், உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த 2022 ஜூலை 8ம் தேதி, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டனர்.
'அதை ஏற்று, மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது' என்றார்.
இதை மறுத்த நடிகை சாந்தினி தரப்பு வழக்கறிஞர், 'பாலியல் குற்ற வழக்குகளில் சமரசம் என்பது கிடையாது. அப்படி எந்த சமரசமும் நடக்கவில்லை' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக நீங்கள் ஏன் அப்போதே மனு தாக்கல் செய்யவில்லை' எனக் கேள்வி எழுப்பியதுடன், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதே வேளையில், நடிகை தொடர்ந்த வழக்கு, மூன்று ஆண்டுகளாக ஏன் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பதை, உச்ச நீதிமன்ற பதிவாளர் விளக்க அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -