ADDED : மே 29, 2026 12:09 AM

சென்னை: ஹாலிவுட், ஜெர்மன் உட்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த சத்யேந்திரா நேற்று காலமானார்.
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகர் சத்யேந்திரா, 65, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏழு மொழிகளில், 150க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்; 15 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ஒரு ஹாலிவுட் மற்றும் ஜெர்மன் மொழி படத்தில் நடித்து உள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், ஆசிரியர் என பல்வேறு முகம் கொண்ட இவர், கன்னடத்தில் இலக்கியம் மற்றும் தத்துவத்தில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார்.
ரஜினி, ரகுவரன் ஆகியோரின் தொடக்க காலங்களில் அவர்களுடன் பயணித்துள்ளார். 'நாக் அவுட்' குறும்படத்தில் பிணமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தமிழில் ஏழாவது மனிதன், மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பின், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழி ஆசிரியராக மாறி, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வகுப்பு எடுத்து வந்தார்.
சமீபத்தில் விஜய் நடித்த லியோ படத்தை எதிர்மறையாக விமர்சித்து பிரபலமானார்.
இந்நிலையில், உடல் நலமின்றி இருந்த இவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவருக்கு குடும்பம் இல்லை. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது.
கர்நாடகாவில் சத்யேந்திராவின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருந்தால், தகவல் அளிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
