பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
ADDED : செப் 20, 2025 07:33 AM

சென்னை: தமிழக பா.ஜ.,வில், கட்சியை வளர்க்காமல், கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர்களின் விபரங்களை, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ.,வில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்களாக உள்ள சிலர், தங்களுக்கென தனி கோஷ்டிகளை உருவாக்கி வருகின்றனர். அவர்கள், தொண்டர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடாமல், பூத் கமிட்டி கூட்டங்களில் பங்கேற்காமல், தங்களை முன்னிலைப்படுத்தியே நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அக்கரையில், தமிழக பா.ஜ.,வின், 'சிந்தனை அமர்வு' கூட்டம், சில தினங்களுக்கு முன் நடந்தது. பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி தொடர்பாக, பல்வேறு வியூகங்களை நிர்வாகிகளிடம், சந்தோஷ் தெரிவித்தார்.
அவரிடம், பா.ஜ.,வில் தலை துாக்கியுள்ள கோஷ்டி அரசியல், அதனால் ஏற்படும் உட்கட்சி பூசல், கட்சியின் முடிவுகளை வெளியே கசியவிடுவோர் குறித்த விபரங்களை, சில நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்; அவற்றை, சந்தோஷ் கேட்டு தெரிந்து கொண்டார்.
மேலும், இவ்விபரங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிட தலைவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவ டிக்கை எடுக்க வலியுறுத்து வதாகவும் கூறினார்.
அதன்படி, அவர்களின் விபரங்களை, தற்போது மேலிடத் தலைவர்களிடம், சந்தோஷ் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, தமிழக பா.ஜ.,வில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் மீது, கட்சி மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.