ADDED : ஜூன் 03, 2026 02:11 AM

- நமது டில்லி நிருபர் -
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று டில்லிக்கு வந்திருந்தார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தின் சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் மற்றும் நிதி உதவி அளிக்கும்படி, கட்கரியிடம், தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், மாநில அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு உட்கட்டமைப்புத் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
'நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'எலிவேட்டட் காரிடார்' எனப்படும், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க அனுமதி மற்றும் நிதியைப் மத்திய அரசு வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
