/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிதைந்து வரும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில்... புனரமைக்கப்படுமா?; சீரமைத்து குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் வலியுறுத்தல்
/
சிதைந்து வரும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில்... புனரமைக்கப்படுமா?; சீரமைத்து குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் வலியுறுத்தல்
சிதைந்து வரும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில்... புனரமைக்கப்படுமா?; சீரமைத்து குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் வலியுறுத்தல்
சிதைந்து வரும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த விநாயகர் கோவில்... புனரமைக்கப்படுமா?; சீரமைத்து குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் வலியுறுத்தல்
UPDATED : செப் 04, 2025 10:31 AM
ADDED : செப் 04, 2025 01:40 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நுாற்றாண்டு பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவில் சொத்துக்கள் இருந்தும் 103 ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தாமல் பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மிகப்பெரிய சிவாலயங்களை போல பெரிய சுற்றுச்சுவருடன், இரு கோபுரங்களுடன் கட்டப்பட்டது.
இந்த கோவில், காலப் போக்கில் பராமரிக்கப்ப டாமல் சிதைந்து, பழமையான கட்டடக்கலையானது அழிந்து வரும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இத்திருக்கோவில் கடந்த 1922ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நுாறாண்டுகளை கடந்து பராமரிப்பின்றி கிடக்கிறது.
பெரிய கோவில் என்றழைக்கப்படும் சுந்தர விநாயகருக்கு, ஆண்டுதோறும் 7 நாட்கள் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தது. இடையே கடந்த 40 ஆண்டுகளாக பராமரிப்பின்றி விடப்பட்டதால், சிறிது சிறிதாக சிதிலமடைந்து, வரலாற்று சிறப்பை இழந்து வருகிறது.
கோவிலை இந்து சமய அறநிலைத்துறையினர் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில், பராமரிக்கவில்லை. இக்கோவிலில் நான்கு புறமும் 15 அடி உயரமுள்ள மிகப்பெரிய சுற்றுச்சுவர்கள் அமை ந்துள்ளன.
நுழைவு வாயிலில் சுந்தர விநாயகர் சிலையுடன் கூடிய ஒரு முகப்பும், அதன் உள்பகுதியில் கருங்கல் சுவர்களால் மண்டபமும் அமைந்துள்ளது.
இதனையடுத்து உள்பிரகாரம் மிகப்பெரிய அளவில் கருங்கல் மண் டபத்தால் கட்டப்பட்டு, இரண்டு கோபுரங்கள் அமைந்துள்ளன. அதன் உள்ளே மூலவர் சன்னதியில் சுந்தர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் உள் வளாக கருங்கல் மண்டபத்தில், கண்ணாடி கூண்டுகளில் பழங்கால அரண்மனை விளக்குகள் போன்ற கட்டமைப்புகள் உள்ளன.
கோவிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அரணாகவும், சுற்றிவர உட்பிரகார வாயில் கள் சிறப்பாக அமைந்துள்ளன. கோவில் பராமரிக்காமல் விடப்பட்டதால், பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. வலதுபுற சுவரும் பாதியளவு உடைந்து விழுந்துள்ளது. எஞ்சியுள்ள சுவர்களும் சிதைந்து வருகிறது.
கோவில் கோபுரங்களில் , பழங்காலத்து செங்கல் சிற்பக்கலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது அவை படிப்படியாக சிதைந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கோபுரத்தின் மீது இருந்த கலசங்கள் திருடு போனது. தற்போது, கோவில் உள் வளாக கருங்கல் மண்டபம் சேதமாகி மழைநீர் ஒழுகி வீணாகி வருகிறது.
கிராம மக்கள் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி மற்றும் அய்யப்ப பக்தர்களின் வழிபாடு மட்டுமே தற்போது நடந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இக்கோவிலுக்கு சுற்றுப்பகுதி கிராமங்களிலில், 10 ஏக்கர் அளவில் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் குத்தகை க்கு விடப்பட்டு, அதற்கான வருவாயை இந்து சமய அறநிலையத் துறையினர் வசூல் செய்கின்றனர்.
ஒரு பைசா கூட கோவில் பராமரிப்புக்கும், வழிபாடுகளுக்கும் செலவிடுவதில்லை. பழமையா ன இக்கோவிலை பராமரிக்க முயற்சி எடுக்காமல் உள்ளனர். கோவிலை சீர்படுத்தி தர வேண்டும் என்று, ஊர் முக்கியஸ்தர்கள் தரப்பிலும், ஊராட்சி நிர்வாகம் தரப்பிலும் அறநிலையத்துறைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பழமையான கோவில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், அரிதாக உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்து தர வேண்டும் என கடந்து 4 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அறநிலையத்துறையினர், மாதம் 2 லிட்டர் எண்ணெய் மட்டும் விளக்கேற்ற வழங்குகின்றனர்.
இக்கோவிலின் உள் பகுதியில் தான், கோவிலுக்கான பஞ்சலோக சிலைகள், பிற கோவிலின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.