/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் இரும்பை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
/
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் இரும்பை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் இரும்பை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் இரும்பை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
ADDED : அக் 20, 2025 09:34 PM

வானுார்: புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் இரும்பை சந்திப்பில் அதிகரித்து வரும் விபத்துகளைத தடுக்க மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்ததாகும். இந்த சாலை வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. கடந்த காலங்களில், இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் வாகன போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.
இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. கடந்த 2008ம் ஆண்டில், 38.620 கி.மீ., துாரத்திற்கு 273.6 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. 8.143 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை, 5 இடங்களில் சுரங்க பாலங்கள், 2 பெரிய பாலங்கள், 5 சிறிய பாலங்கள், 33 பாக்ஸ் கல்வெர்ட், 30 பைப் கல்வெர்ட்டுகள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
கடந்த 2012ம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நான்குவழிச் சாலை திறந்து விடப்பட்டது. ஆனால், சரியான திட்டமிடல் இல்லாததால், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்படவில்லை.
இரும்பை, தைலாபுரம், கிளியனுார் சந்திப்பு, கீழ்கூத்தப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்படாமல் சாலை திறக்கப்பட்டது. இந்த சந்திப்புகள் வழியாக, இப்பகுதியில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்த இடங்களில் மேம்பாலங்கள் இல்லாததால், ஆரம்பத்தில் இருந்தே விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக கீழ்கூத்தப்பாக்கம் - கிளியனுார் சாலை சந்திப்பில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, வந்ததால், அப்பகுதியில் கடந்த ஓராண்டிற்கு முன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 20 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதே சமயம் புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையிலேயே மிக முக்கிய சந்திப்பான இரும்பை ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படவில்லை. திருச்சிற்றம்பலம், கூட்ரோடு மற்றும் அதைச்சுற்றியுள்ள மக்களும், இரும்பை கிராமம் வழியாக கோட்டக்கரை, ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், ராயப்பேட்டை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களும் தினசரி பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றனர்.
திண்டிவனம் பைபாஸ் சாலையில் அதிகளவில் விபத்துகள் நடத்திருப்பது இரும்பை சந்திப்பில்தான். பைபாஸ் வந்த பின், இந்த பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி இறந்தனர்.
இந்த சந்திப்பில் விபத்துகளை தடுக்க பேரிகார்டை வைத்து போலீசார் சமாளித்து வருகின்றனர். அப்போதும் விபத்துகள் குறையவில்லை. எனவே, பொது மக்களின் நலன் கருதி, இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி - திண்டிவனம் சாலை அமைக்கும் போதே, இந்த பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் விலை மதிக்க முடியாத பல உயிர்கள் பலியாகின்றன. சிலர் பலத்த அடிப்பட்டு, கை, கால்களை இழந்துள்ளனர். இரவு நேரங்களில் ஒவ்வொரு முறையும் சாலையை கடக்கும் போது, உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
-மூர்த்தி,
பா.ஜ., முன்னாள் மாவட்ட
துணைத் தலைவர்.