ADDED : ஜூன் 15, 2026 02:45 AM

விழுப்புரம்: தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை சம்பவங்களைக் கண்டித்து விழுப்புரத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பில் துவங்கிய ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் சல்மான் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்துல்ஹை முன்னிலை வகித்தார். செயலாளர் முகமது இப்ராஹிம் வரவேற்றார். மேலாண்மைக் குழு உறுப்பினர் முஹமது சிறப்புரையாற்றினார்.
ஊர்வலம் திருச்சி நெடுஞ்சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலை அடைந்தது. அங்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடரும் பாலியல் சீண்டல், கொலை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட பொருளாளர் அப்துல் லத்தீப் நன்றி கூறினார்.
