/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜவ்வாக இழுக்கும் திண்டிவனம் பஸ் நிலைய பணி... அவலம்; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 16, 2025 06:42 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் 27.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் பணி ஜவ்வாக இழுத்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திண்டிவனத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பஸ் நிலையம் இல்லை. மேம்பாலத்தின் கீழ் பஸ் நிலையம் செயல்பட்டு வரும் நிலை உள்ளது.
நீண்ட கால கோரிக்கைக்கு பின், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 25.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திண்டி வனம் - சென்னை சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான கடந்த 2023ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது.
பஸ் நிலையம் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்குள் முடிக்க நிர்ணயம் செய்திருந்த நிலையில், இதுவரை முடிக்கப்படாமல் ஜவ்வாக இழுத்து வருகிறது.
புதிய பஸ் நிலையத்தை விரைவில் திறக்கப்பட வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் தரப்பில் பல முறை கோரிக்கை வைத்தும் கோரிக்கை கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதனரெட்டி பஸ் நிலைய பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்தாரருக்கு உத்தரவிட்டு சென்றார்.
தற்போது, கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலையத்தின் உள் பகுதியில் பஸ்கள் வந்து செல்லும் பாதைகள் அனைத்தும் தார் சாலைகள் போடும் பணி முடிந்துள்ளது. புதிய பஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், வெளிப்பகுதியிலிருந்து உள்ளே பஸ்கள் வரும் இடத்தில் புதிய தார் சாலைகள் போடுவற்காக பள்ளம் தோண்டப்பட்டு, ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது.
இது இல்லாமல், புதிய பஸ் நிலையம் எதிரிலுள்ள சென்னை சாலையில், இரண்டு புளிய மரங்கள் தடையாக உள்ளது.
இதேபோல், புதிய பஸ் நிலையத்தில் அனைத்து இடங்களிலும் தற்காலிகமாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி சார்பில் நிரந்த மின்இணைப்பு கேட்டும், பஸ் நிலைய பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு அனுமதி கடிதம் மின்துறைக்கு கொடுக்கப்பட்டு, இதுவரை மின்துறை சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படாமல் உள்ளது.
தற்போது தடையாக உள்ள 2 புளிய மரங்கள் அகற்றுதல், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி முடிந்து விட்டாலே, புதிய பஸ் நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராகிவிடும்.
இதற்கு நகாட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பஸ் நிலைய பணியில்
ஆர்வம் காட்டினால் சிக்கல்...
அமைச்சராக மஸ்தான் இருந்தபோது அவரது முயற்சியால், 2023ல் புதிய பஸ் நிலையம் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கியது. பணிகள் பாதி முடிந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அவரது பதவி பறிக்கப்பட்டது. தி.மு.க.,வை சேர்ந்த திண்டிவனம் நகர மன்ற தலைவராக உள்ள நிர்மலா ரவிச்சந்திரன். இவரது கணவரான தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன், நகராட்சி புதிய பஸ் நிலையத்தை திறந்து வைப்பதற்கு முனைப்பு காட்டினார். இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி ஊழியர் காலில் விழுந்த விவகாரத்தில், ரவிச்சந்திரன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டதால், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்டிமென்ட்டாக, திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைப்பதில் மும்முரம் காட்டும் அரசியல்வாதிகளுக்கு எந்த ரூபத்திலாவது சிக்கல் வருவதாக சென்டிமென்ட்டாக நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.